பதற்றத்தில் பெல்ஜியம்! வைரஸ் நிபுணரைக் கொல்லும்திட்டத்துடன் ராணுவச் சிப்பாய் கன ரக ஆயுதங்களுடன் மறைவு
கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி என்பவற்றின் மீதான விரக்தி மருத்துவர்கள், தொற்றுநோயியலாளர்கள் மீதான பழிவாங்கலாக உருவெடுக்கும் சம்பவம் பற்றிய ஒரு தகவல் இது.
பெல்ஜியம் நாடு சில தினங்களாகப் பதற்றத்தில் இருக்கிறது. அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தலைமை வகித்துவருகின்ற பிரபல வைரஸ் தொற்று நோய் நிபுணர் குடும்பத்தோடு மறைவிடம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருகிறார். அவரதுகுழந்தைகள் பள்ளிக்குப் போக முடியாது உள்ளனர்.
அங்கு என்ன நடக்கிறது?
வைரஸ் நிபுணரைக் கொல்வது உட்பட பல அழிவு வேலைகளைச் செய்யும் திட்டங்களுடன் இராணுவ வீரர் ஒருவர் ரொக்கற் லோஞ்சர் உட்பட கன ரக இயந்திரத் துப்பாக்கிகளுடன் தப்பித் தலைமறைவாகி உள்ளார். 46 வயதான படைவீரர் துப்பாக்கி சுடும் பயிற்றுநராகத் தான் பணியாற்றுகின்ற படை முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து தாங்கி எதிர்ப்புத் துப்பாக்கிகள் உட்பட பெருமளவு ஆயுதங்களைத் தனது காரில் ஏற்றி எடுத்துக் கொண்டு நாட்டின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளார் எனச் சந்தே கிக்கப்படுகிறது.
பெல்ஜியத்தில் Limburg என்னும் பகுதியில் – நெதர்லாந்து, மற்றும் ஜேர்மனி நாடுகளின் எல்லையோரம் – தேசிய பூங்காவை (Kempen national Park) உள்ளடக்கிய அடர்ந்த வனப்பிரதேசத்தினுள்ளேயே ஆபத்தான அந்த ஆயுததாரி ஒளிந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பெல்ஜியம் பொலீஸார் மற்றும் இராணுவத்தினர் சுமார் நானூறு பேர் துருப்புக்காவிகள், கவச வண்டிகள், ஹெலிக்கொப்ரர்களது உதவியுடன் கடந்த ஐந்து தினங்களாகக் காட்டை சல்லடை போட்டுத் தேடிவருகின்றனர். நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய அயல் நாடுகளது படைகளும் ஆதரவு வழங்குகின்றன .படைவீரரின் கையில் தாங்கி எதிர்ப்புத் துப்பாக்கி இருக்கலாம் என்ற அச்சத்தால் கவச வாகனங்களும் தேடுதல் பணியில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆபத்தான ஆயுததாரி எனக் கூறப்படுபவர் இன்னும் சிக்கவில்லை.
யார் அந்தப் படை வீரர்?
தேடப்பட்டு வருபவர் சாதாரண படைச் சிப்பாய் அல்லர். ஜூர்கன் கோனிங்ஸ் (46) என்னும் பெயர் கொண்ட அவர் ஆப்கானிஸ்தான், ஈராக், கொசாவோ போன்ற நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். இராணுவத்தில் மதிப்பெண் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்.
ஆனால் தீவிர வலதுசாரி எனச் சந்தேகிக்கப்பட்ட அவர் அண்மைக்காலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பிரிவின் பட்டியலில்சேர்க்கப்பட்டிருந்தார். நாட்டுக்கும் மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தக் கூடியவர் என்று கருதப்படுபவர். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி என்பவற்றை எதிர்த்து வந்த அவர்நாட்டின் தலைமை வைரஸ் நிபுணர் மார்க் வான் ரான்ஸ்ட்(Marc Van Ranst)அவர்களைக் கொல்லப் போவதாக பலமுறை மிரட்டல் விடுத்திருந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தீவிரவாதி எனச் சந்தேகிக்கப்பட்ட படைவீரர் ஒருவர் இராணுவ ஆயுதக் களஞ்சியத்தை அணுகுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்று கேட்டு எதிர்க்கட்சிகள் அரசை கேள்விக் கணைகளால் தாக்கி வருகின்றன.
கடந்த செவ்வாயன்று ஆயுதங்களுடன் தலைமறைவாகுவதற்கு முதல் நாளில் அந்தப் படைவீரர் வைரஸ் நிபுணரது வீட்டின் அருகே நடமாடினார் என்று கூறப்படுகிறது. கைவிடப்பட்டிருந்த அவரது காரில் இருந்து துப்பாக்கிகள் பலவற்றை பொலீஸார் மீட்டுள்ளனர்.
“நான் செய்யப் போகின்ற செயலுக்குப் பிறகு உயிருடன் இருப்பேன் என நம்பவில்லை” எனத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அந்தச் சிப்பாய் கடைசியாகத் தனது காதலிக்கு எழுதியுள்ளார். வேறு சில கடிதங்களில் அவரது தாக்குதல் இலக்காக வைரஸ் தொற்று நோய் நிபுணரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.
பாரிஸிலிருந்து குமாரதாஸன்