பெலாரூஸின் ஜனாதிபதி விமானத்ததுக்கு மறித்ததை மேற்கு நாடுகள் புலம்புவது வெறும் நடிப்பே, என்கிறது ரஷ்யா.
பெலாரூஸ் ஜனாதிபதி லுகஷெங்கோ லித்வேனியாவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தைத் தனது விமானப் படை மூலம் வழிமறித்துத் தனது நாட்டில் இறங்கவைத்தார். விமானத்திலிருந்த பெலாரூஸ் அரசியல் விமர்சகரும் அவரது பெண் நண்பியும் கைதுசெய்யப்பட்டபின் விமான மீண்டும் பறக்க அனுமதிக்கப்பட்டது.
உலக நாடுகள் பலவற்றுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்த அச்சம்பவம் இன்று ஊடகங்களெங்கும் நிறைந்திருக்கிறது. ஏற்கனவே பல ஜனநாயக மீறல்களுக்காகத் தடைகளால் தண்டிக்கப்பட்டிருக்கும் பெலாரூஸை மேலும் தண்டிக்கவேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கலந்தாலோசித்து வருகின்றன.
மேற்கு நாடுகளின் எதிர்ப்பை முக்ச்சுழிப்புடன் எதிர்கொள்ளும் ரஷ்யா நடந்தது பற்றிய அவர்களின் பிரமிப்பும், புலம்பலும் வெறும் பாசாங்கே என்கிறது. அந்த நடவடிக்கைக்கு ஒப்பீடாக 2013 இல் பொலீவியாவின் ஜனாதிபதி ஏவோ மொராலஸ் மொஸ்கோவுக்கு விஜயம் செய்துவிட்டுத் திரும்பும்போது மேற்கு நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து நடந்துகொண்ட விதத்தை உதாரணமாகக் குறிப்பிடுகிறது.
அமெரிக்க அரசின் இரகசியக் கோப்புக்களைப் பகிரங்கப்படுத்திய எட்வர்ட் ஸ்னௌடன் தப்பியோடி வெவ்வேறு நாடுகளால் புகலிடம் மறுக்கப்பட்ட பின்பு ரஷ்யாவுக்குச் சென்றிருந்த காலம் அது. அச்சமயத்தில் பொலீவியாவின் ஜனாதிபதி ஏவோ மொராலஸ் மொஸ்கோவுக்குச் சென்றுவிட்டுத் தனது நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
அந்த விமானத்துக்குப் பறப்பதற்கான வழியை ஐரோப்பிய நாடுகள் பலவும் கொடுக்க மறுத்தன. பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி ஆகிய நாடுகள் வான் வழியை மறுத்தபின் ஆஸ்திரியாவில் எரிபொருள் பெற்றுக்கொள்ள அனுமதி பெற்றது. வியன்னாவில் இறங்கிய விமானத்தை ஆஸ்திரிய உளவுத்துறையினர் சோதனையிட்டார்கள்.
ஏவோ மொராலஸின் விமானத்துக்கு வழி மறித்ததும், சோதனையிட்டதற்கும் காரணம் அந்த விமானத்தில் ஸ்னௌடன் கடத்தப்படுகிறார் என்ற சந்தேகம் எழுந்திருந்ததாலாகும். ஸ்னௌடனை எப்படியென்றாலும் வலைபோட்டுப் பிடிப்பதற்கு அமெரிக்கா அலைந்துகொண்டிருந்தது. அவர்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளை ஏவோ மொராலஸின் விமானத்தை வழிமறிக்கும்படி கட்டாயப்படுத்தியது.
அந்த்ச் சம்பவத்தைப் பற்றி அன்று பேசும்போது “ஒரு சுதந்திர நாட்டின் தலைவரை வழிமறிப்பதன் மூலம் நீங்கள் மிகப்பெரும் சரித்திரத் தவறைச் செய்கிறீர்கள்,” என்று ஏவோ மொராலஸ் குறிப்பிட்டிருந்தார். பல தென்னமெரிக்க நாடுகளும் நடந்ததற்குத் தமது வெறுப்பைத் தெரிவித்திருந்தன. சுமார் 13 மணி தாமதமாகவே தனது நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரின் காரியதரிசியான மரியா சக்கரோவா 2013 ஆண்டின் அந்தச் சம்பவத்தை இப்போது சுட்டிக்காட்டி “நேற்று நடந்த சம்பவத்துக்காகக் கொதிக்கும் மேற்கு நாடுகள் அன்று நடந்த சம்பவத்தை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்,” என்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்