தனக்குக் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்தும் வேலைக்குச் சென்ற நாலு பேர் மீது சுவீடனில் வழக்கு.
கொரோனாத் தொற்றுக்கள் 2020 ம் ஆண்டு சீனாவில் பரவுவதாகவும், அதன் விளைவுகளையும் அறிந்துகொண்ட உடனே சுவீடனில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு கொவிட் 19 வியாதியானது மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் என்று உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் மூலம் தெரிந்துகொண்டே அதைப் பரப்புகிறவர் அதன் விளைவுகளைத் தெரிந்துகொண்டே இன்னொருவரின் ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்பதாகும். அத்துடன் அந்தப் பிரகடனம் அவ்வியாதி சம்பந்தப்பட்ட மற்றும் பல முடிவுகளை அரசு எடுப்பதற்கும் அடிப்படையாக இருந்தது.
கொரோனாத் தொற்றுக்கள் சுவீடனில் பரவ ஆரம்பித்த உடனேயே அவ்வியாதிக்கான என்ன ஒரு சிறு அடையாளம் தெரிந்தாலும் அவர் வீட்டிலிருந்துகொண்டு, தன்னைப் பரிசோதித்துக் கொண்டு தொற்றில்லை என்று தெரிந்துகொள்ளும்வரை முழு ஊதியத்துடன் ஓய்வெடுக்கலாம் என்று அரசு அறிவித்தது. அதற்காக அரசின் காப்புறுதி சகலருக்கும் ஊதியத்தைக் கொடுக்கும். தற்போது சந்தையிலிருக்கும் பரிசீலனைக் கருவிகள் வரமுன்னர் கொரோனாவின் எந்த ஒரு அடையாளமிருப்பினும் வீட்டிலிருந்து ஒரு வாரம் ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிக்கப்பட்டது.
இவைகளை மீறித் தமக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை பரிசோதித்து அறிந்துகொண்ட பின்னரும் வேலைக்குப் போன நான்கு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அடுத்தவரின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பைக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டதற்கான இரண்டு வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம். [இதே போன்ற சட்டம் தனக்கு எய்ட்ஸ் வியாதி இருப்பது தெரிந்துகொண்டே இன்னொருவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்பவர்களையும் தண்டிக்கும்.]
சாள்ஸ் ஜெ. போமன்