ஜூர்கன் கோனிங்ஸ் தேடல் தொடரும் ஏழாவது நாள், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரெசெல்ஸிற்கு விஜயம்.
ஒரு வாரத்துக்கு முன்னர் தான் நாட்டின் தலைமையையும், மருத்துவ உயர்மட்டத்தையும் பழிவாங்கப்போவதாகக் கடிதமெழுதி வைத்துவிட்டுக் காணாமல் போய்விட்ட அதிரடி இராணுவ வீரனைத் தேடிவரும் பெல்ஜியத்தின் தலைநகரம் பிரெசெல்ஸில் பாதுகாப்பு மிகவும் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரில் முக்கிய தலைவர்கள் கூடும்போது பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது சாதாரணமே எனினும், ஜூர்கன் கோனிங்ஸ் பற்றிய கவனமும் இருப்பதால் வழக்கத்தை விட அதிகமான பாதுகாப்பு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு தேசிய வனத்தின் வெளியே ஜூர்கனின் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதால் அங்கே நடந்த தேடல்களில் எவ்வித பலனுமில்லை. ஆயினும், தேடுபவர்களின் கவனத்தைத் திருப்ப ஜூர்கன் அந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாமென்றும் சந்தேகம் இருக்கிறது. தேடுதல்கள், கடந்த நாட்களில் ஜூர்கனுக்குப் பழக்கமானவர்கள், தொடர்பிலிருந்த வலதுசாரி இயக்கக் காரியாலயங்கள், முக்கியஸ்தவர்கள் வீடுகளில் செய்யப்பட்டன. எவராலும் ஜூர்கன் கோனிங்ஸ் எங்கே போனாரென்று குறிப்பிட முடியவில்லை.
ஜூர்கன் கோனிங்ஸ் பிரசெல்ஸ் வடக்கு ரயில் நிலையத்தையடுத்த பகுதியில் யாராலோ காணப்பட்டதாகத் தெரியவந்ததால் நேற்று ஞாயிறன்று அந்த ரயில் நிலையத்தில் எவ்வித ரயில்களையும் நிற்கவிடாமல் செய்து நகரின் ஒரு பகுதியையும் மூடிச் சோதனைகள் செய்யப்பட்டன. அதிலும் பலனேதும் கிடைக்கவில்லை. பெல்ஜியத்தின் அரச வழக்கறிஞர் இதேசமயம் பகிரங்கமாக “சரணடைந்து, பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாம்,” என்று ஜூர்கன் கோனிங்ஸுக்கு வேண்டுகோள் விட்டிருக்கிறார்.
கூடவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கொரோனாப் பாதிப்புக்களுக்கான நிவாரணங்கள், ரஷ்யா மீதான நடவடிக்கைகள், காலநிலை மாற்றம் ஆகியவை பற்றிப் பேசவிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்