தினமும் ஆயிரக்கணக்கானோரை கொவிட் 19 பிரேசிலில் பலியெடுக்கும்போது மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் ஜனாதிபதி.

பிரேசில் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ ஞாயிறன்று ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் ரியோ டி ஜெனீரோவின் பிரபலமான கடற்கரைகளினூடாக ஊர்வலம் சென்றார். சரியான தருணத்தில் கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காததற்காகப் பல கோண்ங்களிலுமிருந்தும் வரும் விசாரணையை உதாசீனம் செய்யும் அவரது மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சுமார் 40 கி.மீற்றரைக் கடந்து பிளெமிங்கோ கடற்கரையில் நிறைவடைய அங்கே அவர் தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார்.

“வீடுகளுக்குள் முடங்கியிருப்பதால் கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்தலாம் என்ற எவ்வித விஞ்ஞான ஆதாரங்களுமில்லை,” என்று நாட்டின் ஆளுனர்கள் பலர் தத்தம் பகுதிகளில் போட்டிருக்கும் வீட்டடங்கை எதிர்க்கும் அவர் குறிப்பிட்டார். கொவிட் 19 தொற்றுகளின் ஆரம்பத்தில் அது ஒரு சாதாரண காய்ச்சல் என்று புறம் தள்ளிய அவர் தொடர்ந்தும் நாட்டில் அதற்கான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மறுத்து வருகிறார். பொருளாதார இயந்திரம் வழக்கம்போல் இயங்கவேண்டும், வீட்டுக்குள் முடங்குபவர்கள் சோம்பேறிகள் என்று அவர் சாடி வருகிறார். 

இதுவரை 16 மில்லியன் பேர் பிரேசிலில் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். சுமார் 450,000 பேர் இறந்து போயிருக்கிறார்கள். ஆயினும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க மறுக்கும் பொல்சனாரோ அரசின் மீது கொரோனாவைக் கட்டுப்படுத்தாத நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமலிருப்பதற்காக விசாரணை நடாத்தி வருகிறது நாட்டின் செனட் சபை.

2022 இல் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் பொல்சனாரோ அதற்கான நடவடிக்கையாகவே தனது ஆதரவாளர்களைக் கூட்டிப் பேரணிகள் நடாத்துவது என்று கருதப்படுகிறது. அவருக்கெதிராக முன்னாள் ஜனாதிபதி லூலா போட்டியிடுவாரானால் லூலாவே வெல்வாரென்று கருத்துக் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 2

2018 இல் நடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி லூலா போட்டியிட முடியாது என்ற நிலைமை இருந்தது. அவர் மீது சாட்டப்பட்ட லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காகச் சிறையிடப்பட்டிருந்த லூலா சமீபத்தில் எதிர்பாராத விதமாக நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த தேர்தலில் போட்டியிடுவது பற்றிய முடிவை அவர் தெரிவிக்காவிட்டாலும் அவர் போட்டியிடுவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *