மேற்காபிரிக்காவின் மாலியில் ஒரு வருடத்தினுள் இரண்டாவது ஆட்சிக்கவிழ்ப்பு நடந்திருக்கிறதா?
மாலியின் தலைநகரான பாமாக்கோவில் நாட்டின் இராணுவம் தற்காலிகப் பிரதமரையும், ஜனாதிபதியையும் செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டில் மக்கள் பிரதிநிதிகளிலான அரசொன்றைக் கட்டியெழுப்புவதற்காகப் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தவர்கள்தான் இந்த ஜனாதிபதியும், பிரதம மந்திரியுமாகும். அவர்கள் தமது அரசாங்கத்தில் சில மாற்றங்களைச் செய்து ஒரு புதிய மந்திரிசபையை அறிவித்த ஒருசில மணி நேரத்தில் இராணுவம் அவர்களைக் கைப்பற்றி இராணுவ முகாமொன்றுக்குக் கொண்டுசென்றிருக்கிறது. புதியதாக அமைக்கப்பட்ட மந்திரி சபையிலிருந்து இராணுவத்தின் பிரதிநிதிகளிருவர் வெளியேற்றப்பட்டதே இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த இப்ராகிம் பூபக்கர் கெய்த்தாவை இராணுவம் கவிழ்த்து ஆட்சியைக் கையிலெடுத்தது. 2013 இல் ஜனாதிபதித் தேர்தலில் வென்றிருந்த அவர் தனது பதவியிலிருந்து விலகி, பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டார். அதன் பின்னர் இராணுவத்தினரால் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அதே சிறைமுகாமுக்கே பதவி பறிக்கப்பட்ட பிரதமரும், ஜனாதிபதியும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.
2020 இல் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் தற்காலிக அரசில் தாம் பங்குகொள்வதாக இல்லை என்று குறிப்பிட்டபின்னரும் அதைத் தன் பிடிக்குள்ளேயே வைத்திருந்தது. 2020 இன் ஆரம்பத்தில் நாட்டில் பொதுத்தேர்தலை நடாத்துவதாகத் தற்காலிக அரசு அறிவித்திருந்தது. பாதுகாப்பு அமைச்சரும், புலனுறவுத்துறை அமைச்சரும் இராணுவத்தினராகவே இருந்தனர். அவர்களிருவரையும் பதவியிலிருந்து அகற்றியதாலேயே இராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
ஆபிரிக்காவின் சக நாடுகளும், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா அகியவையும் மாலியில் நடந்திருப்பதைக் கண்டித்திருக்கின்றன. கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்கும்படி ஐ.நா கோரியிருக்கிறது.கடந்த சுமார் 20 ஆண்டுகளாகவே மாலியில் பல அரசியல் இழுபறிகள் நடந்து நாடு அமைதியின்றிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்