இந்திய மருத்துவர்களின் கூட்டமைப்பின் தலைவர் கிறீஸ்துவம் பரப்பி வருவதாக ராம்தேவின் கூட்டாளி குற்றஞ்சாட்டுகிறார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட சமூகவலைத்தளப் படமொன்றில் பாபா ராம்தேவ் அலோபதி மருந்துகளையும், அக்கோட்பாட்டையும் “முட்டாள்தனமானவை”, என்று சாடினார். அதனால் ஏற்பட்ட பொது எதிர்ப்பை நேரிட முடியாமல் தனது கூற்றுக்காக ராம்தேவ் பின்னர் மன்னிப்புக் கேட்கவேண்டியதாயிற்று. அதையடுத்து ராம்தேவின் சகா ஆச்சார்யா ராமகிருஷ்னா இந்திய மருத்துவர்களின் கூட்டமைப்பின் மீது இந்தியர்களின் தேசிய உணர்வைத் தூண்டிவிடுவதில் ஈடுபட்டிருக்கிறார்.
ஒன்றின் பின்னர் ஒன்றாக ஆச்சார்யா ராமகிருஷ்ணா இந்திய மருத்துவர்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜோன்ரோஸ் ஜெயலால் மீது தனது பாணத்தை எறிந்து வருகிறார். அதன் காரணம் அந்த மருத்துவர் கூட்டமைபு ராம்தேவின் அலோபதி பற்றிய இழிதலை வெளிப்படுத்தியதில் முன்னணியில் நின்றதாகும்.
“இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஜோன்ரோஸ் ஜெயலால் இந்தியர்களைக் கிறீஸ்தவத்துக்கு மாற்றி வருகிறார். அதற்காக அவர் போட்டிருக்கும் திட்டத்தினால் ராம்தேவின் மீது குற்றஞ்சுமத்தினார். இந்திய மக்களை யோகா, ஆயுர்வேதா போன்றவைகளிலிருந்து திசைதிருப்பவே இதைச் செய்கிறார்.” போன்ற குற்றச்சாட்டுக்களை டுவீட்டியிருக்கும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா “விழித்தெழுங்கள் இந்தியர்களே, இல்லாவிட்டால் எதிர்காலச் சந்ததி உங்களை மன்னிக்காது,” என்று அறைகூவியிருக்கிறார்.
இந்திய மருத்துவர்கள் பலரும் அந்த டுவீட்டுகளை விமர்சித்திருக்கிறார்கள். ‘இப்படியான திசைதிருப்பல்கள் ஏற்கனவே வேதனையிலிருக்கும், மனிதர்களைப் பிரித்து மனச்சஞ்சலத்துக்கு உள்ளாக்குபவை,” என்கிறார்கள். நடந்த தவறுக்குப் பொறுப்பேற்காமல் மனிதர்களை உசுப்பேத்தி விடுவது நேர்மையானதல்ல என்கிறார்கள் அவர்கள்.
டூவீட்டுகளுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் தமது கருத்துக்களைதச் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்