ஐரோப்பிய கார்களில் “கறுப்புப் பெட்டி”அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது!
விமானங்களில் பயன்படுத்தப்படுபவை போன்ற விபத்துத் தகவல் பதியும் “கறுப்புப் பெட்டிகள்” (boîte noire-black box) கார்களிலும் கட்டாயமாக்கப்படவுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் பாவனைக்கு வருகின்ற புதிய கார்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மே மாதம் தொடக்கம் கறுப்புப் பெட்டி பொருத்தப்பட்டவையாக இருப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்களுக்கான காரணங்களை சரியாகக் கண்டறிவதற்காக கார்களில்கறுப்புப் பெட்டிகளைப் பொருத்துவதைக்கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் கடந்த 2019 இல் ஆதரவாகவாக்களித்திருந்தது.அதன்படி ஒன்றியநாடுகளில் புதிய கார்கள் அனைத்துக்கும் 2022 மே மாதம் தொடக்கம் கறுப்புப் பெட்டி கட்டாயமாகிறது.
பின்னர் 2024 முதல் சகல கார்களிலும் அது பொருத்தப்படவேண்டும். கடைசி ஐந்து விநாடிகளில் காரின் வேகம், (speed of the vehicle) பிரேக்குகளின் செயற்பாடு(activation of the brakes)ஸ்ரெயரிங்கின் கோணம் (angle of the steering wheel) மோதலின் சக்தி (force of the collision) ஆசனப் பட்டிகள், (wearing of the seat belt) இயந்திரத்தின் வேகம் (engine speed)ஆகியவற்றை இந்தக் கறுப்புப் பெட்டி பதிவு செய்யும். ஆனால் விமானங்களில் விமானிகளது கடைசி உரை யாடல்களைப் பதிவு செய்வது போன்று கார்களில் ஒலிகளை அது பதிவு செய்யமாட்டாது.
விபத்துக்குள்ளான விமானங்களின் இறுதிக் கணங்கள் தொடர்பான சகலதகவல்களையும் பதிவு செய்கின்ற “கறுப்புப் பெட்டி” எனப்படும் கருவி போன்றே கார்களில் பொருத்தப்படுகின்ற கருவிகளும் செயற்படும்.
விபத்துக்குள்ளான கார்களின் இந்தப் பதிவு கருவிகளில் உள்ள தரவுகளைபொலீஸார் மற்றும் சட்டத்தை அமுல் செய்கின்றவர்கள் மாத்திரமே பயன் படுத்தமுடியும். வாகனக் காப்புறுதி நிறுவனங்கள் அதனை அணுக முடியாது.
அத்துடன் வாகனத்தினதோ சாரதியினுடையதோ விவரங்கள் கறுப்புபெட்டியில் பதிவாகி இருக்காது. அமெரிக்காவில் கார்களில் இவ்வாறு கறுப்புப் பெட்டி நடைமுறைக்கு வந்த பின்னர் ஐந்து ஆண்டுகளில் வீதி விபத்துக்கள் இருபது வீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குமாரதாஸன். பாரிஸ்.