இந்தோனேசியாவில் மாலுமிகளுக்கு மருத்துவ சேவை செய்பவர்களிடையே கொரோனாத்தொற்று காணப்பட்டது.
ஜாவா துறைமுகத்துக்கு வந்திருந்த பனாமா நாட்டின் கொடியைச் சுமந்திருக்கும் ஹில்மா பல்க்கர் என்ற பிலிப்பைன்ஸ் கப்பலின் 13 மாலுமிகளுக்குக் கொவிட் 19 தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ சேவைகளைச் செய்வதற்கு இந்தோனேசியாவால் 140 பேரடங்கிய குழு அனுப்பப்பட்டது. அந்த மருத்துவக் குழுவினரில் 42 பேருக்குக் கொவிட் 19 தொற்றியிருக்கிறது.
தனது மருத்துவக் குழுவினரிடையே தொற்றியுள்ள கொவிட் 19 ஐப் பரிசோதித்து அது இந்தியத் திரிபு என்று அடையாளம் கண்டிருப்பதாக இந்தோனேசியா தெரிவிக்கிறது. அத்துடன் அதே மருத்துவக் குழுவிலிருந்து குறிப்பிட்ட மாலுமிகளுடன் தொடர்புகொண்ட மீதி மருத்துவ சேவையினரையும் தேடிப் பரிசோதித்து வருவதாக இந்தோனேசியா அறிவிக்கிறது.
ஹில்மா பல்க்கரிலிருந்த மற்றைய மாலுமிகளெல்லோரையும் கப்பலிலேயே தனிமைப்படுத்தும் ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. கப்பலிலிருந்த சரக்குகளை இறக்குவதில் அவர்களுடன் தொடர்புகொண்ட 49 இந்தோனேசிய அதிகாரிகளையும் பரிசோதித்து அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கவில்லையென்று உறுதிசெய்துகொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
49,000 பேர் ஏற்கனவே கொவிட் 19 ஆல் இறந்திருக்கும் இந்தோனேசியா கொரோனாத் தொற்றுக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் மக்கள் பெரும் கூட்டங்களாகப் பங்கெடுத்ததன் விளைவால் தொற்றுக்கள் மேலும் பல மடங்காகலாம் என்று இந்தோனேசியா எச்சரிக்கையுடனிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்