கொழும்புத் துறைமுகம் அருகே நைத்திரிக் அமிலம் ஏற்றப்பட்டகொள்கலன் கப்பலில் பெரும் தீ!
கட்டுப்படுத்த இந்தியா உதவி!!
கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டிருந்த கொள்கலன் கப்பல்ஒன்றில் ஏற்பட்ட தீயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய உதவி கோரப்பட்டுள்ளது. நைத்திரிக் அமிலம் (nitric acid) உட்பட ஆபத்தான இரசாயனப் பொருள்கள் அடங்கிய 1,486 கொள்கலன் கள் ஏற்றப்பட்டுள்ள கப்பலிலேயே பெரும் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியுடன் காணப்பட்ட எம். வி.எக்ஸ்-பிறஸ் பேர்ள் (MV X-Press Pearl)என்னும் அந்தக் கப்பலில் முதலில் கடந்த வியாழன்று தீ பரவியது .துறைமுக அதிகார சபையுடன் இணைந்து இலங்கைக் கடற்படையினர் தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டுவந்த நிலையில் இன்று கப்பலில் ஏற்பட்ட வெடிப்பினால் பணியாளர்கள் இருவர் காயமடைந்தனர். ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கப்பலில் உள்ள இரசாயனக் கொள்கலன்களில் சில எரியுண்ட நிலையில் கடலில் வீழ்ந்துள்ளன. இதனால் நைத்திரிக் அமிலம் போன்ற ஆபத்தான பொருள்கள் கடலில் கலந்துள்ளன. கொழும்பு உட்பட கரையோரப் பகுதி மக்களுக்கு இது குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்து வரும் பொருள்களைத் தொட வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மோசமான காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீயணைப்பு முயற்சிகளில் தாமதங்கள் ஏற்பட்டிருப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ தற்சமயம் கப்பலின் இயந்திரப் பகுதிக்கு பரவியுள்ளதால் இலங்கைக் கடற் படையினர் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர். இந்தியக் கரையோரக் காவல் படையின் ‘ஐ.சி.ஜி வைபவ் விஸ்வஸ்ட்’ (ICG Vaibhav Vishwast) உட்பட தீயணைப்பு வசதிகள் கொண்ட கடற்கலங்கள், ரோந்து விமானங்கள் கொழும்புக்கு விரைந்துள்ளன என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுற்றுச் சூழலுக்கும் கடல் உயிரினங்களுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கின்ற இது போன்ற கப்பல் விபத்துகள் இந்து மாகடல் பகுதியில் அடிக்கடி நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு செப்ரெம்பரில் இலங்கையின் கிழக்கு கரைக்கு அப்பால்’எம். ரி நியூ டயமன்ட்’ (MT New Diamond)என்னும் மசகு எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீயினால் பெரும் கழிவு எண்ணெய் மாசுக்கள் கடலில் கலந்தன.
குமாரதாஸன். பாரிஸ்.