காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்த குறுகிய காலத்தில் செய்யக்கூடிய முக்கிய மாற்றம் மீத்தேன் வாயு வெளியீட்டைக் குறைத்தலே!
மனிதர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் உலகின் காலநிலை மாற்றம் பல வழிகளிலும் மனிதனையே பாதித்து அழிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால், அதனைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டுமென்ற குரல்கள் பல கோணங்களிலுமிருந்து எழுந்துவருகின்றன. அம்மாற்றங்களிலொன்றான உலகின் வெம்மை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதும் ஒரு அவசியமாகும். அதற்கான குறைந்த செலவிலான மிகவும் பலனளிக்கக்கூடிய செயல் பூமியிலிருந்து வெளியிடப்படும் மீத்தேன் வாயுவின் அளவை வேகமாகக் குறைப்பதாகும் என்கிறது ஒரு ஆராய்ச்சி.
கிரீன் ஹவுஸ் வாயு என்று குறிப்பிடப்படும் மீத்தேன் வாயு பூமியின் வளி மண்டலத்தில் மற்ற எந்த வாயுவையும் விட வேகமாக மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், இதன் வாழ்நாட்காலம் சுமார் பத்து வருடங்கள் மட்டுமே. மிகக் குறைந்த காலத்தில் வளிமண்டலத்தைச் வெம்மையாக்கினாலும் இதன் குறுகிய வாழ் நாள் காலத்தைக் கவனித்த ஆராய்ச்சியாளர்கள் இதை வேகமாகக் குறைப்பதன் மூலம் வேகமான பலனையும் அடையலாம் என்று நம்புகிறார்கள். அதாவது இதைக் குறைப்பதன் மூலம் வளிமண்டலம் வெம்மையாதல் வேகமாகத் தடுக்கப்படும்.
புதிய ஆராய்ச்சியின் அறிக்கைப்படி 2030 வரை மனிதர்களால் வெளியிடப்படும் மீத்தேன் வாயுவின் அளவை 45 % விகிதத்தால் குறைப்பது சாத்தியமென்று சுட்டிக் காட்டப்படுகிறது. அதன் மூலம் பாரிஸ் ஒப்பந்தத்தின் குறியான 2040 ஆண்டுக்குள் புவியின் வெம்மையடைதலை 2 செல்சியஸால் குறைக்க முடியும் என்று குறிப்பிடப்படுகிறது.
வளிமண்டலத்துக்கு மீத்தேன் வாயுவை வெளியிடுவதில் மனிதர்களின் நடவடிக்கைகள் 60 % காரணமானவை. மிச்சப் பகுதி இயற்கையாலேயே உண்டாகிறது. மனித நடவடிக்கைகளினால் வெளியேறும் மீத்தேன் வாயு அளவில் 40 % விவசாயம், மிருக வளர்ப்பு ஆகியவற்றால் உண்டாகிறது. 35 % நாம் இப்போது பாவிக்கும் எரிபொருட்களால் விளைகின்றன. 20 % மனிதர்கள் உண்டாக்கும் குப்பைகளிலிருந்து வெளியாகின்றன.
நிலக்கரிப் பாவிப்பைப் பொறுத்தவரை நிலக்கரியை மீத்தேன் வெளியாகாமல் செய்தபின் பாவிக்கலாம். நிலக்கரிச் சுரங்கங்களைப் பாவித்தபின் அவற்றை நீரால் நிறைத்து மீத்தேன் வெளியாகாமல் தடுக்கலாம். மற்றைய எரிபொருட்களின் பாவிப்பு, தேக்குமிடங்கள் ஆகியவற்றில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கும் ஏற்பாடுகளை செய்தால் அவையால் பெருமளவும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைத் தடுப்பதுடன் அதைச் செய்யும் நிறுவனங்களால் தமது செலவைக் குறைத்துக்கொள்ளலாம்.
விவசாயத்தைப் பொறுத்தவரை உரங்களைப் பாவிப்பதைக் குறைத்தல், இறைச்சித் தயாரிப்பைக் குறைத்தல் ஆகியவைகளால் பெருமளவு மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கலாம். அத்துடன் இறைச்சிப் பாவிப்பைக் குறைப்பதன் மூலம் மனிதர்களின் ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்திப் பல சுகவீனங்களைக் குறைப்பதால் அதுவும் செலவைக் குறைக்கும் ஒரு செயலாகவே இருக்கும் என்கிறது மேற்குறிப்பிட்ட அறிக்கை.
சாள்ஸ் ஜெ. போமன்