சாதாரண வாழ்வு நிலைக்குத் திரும்பிச் செல்ல ஐந்து படிகளைக் கடக்கத் தயாராகிறது சுவீடன்.
தொற்றுநோய்க்காலத்தின் கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக ஐந்து படிகளில் கடக்க சுவீடன் திட்டமிட்டிருக்கிறது. ஜூன் மாதம் முதலாம் திகதி முதலாவது படியாக கட்டடங்களுக்குள் 50 பேரும், திறந்த வெளி அரங்குகளில் 500 பேரும் கூடலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இதுவரை 20.30 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் உணவுச்சாலைகள் 22.30 வரை திறந்து அந்த நேரம் வரை மதுவகைகளையும் விற்கலாம்.
“தொற்றுநோய்ப் பரவல் முடிந்துவிட்டது என்பதல்ல இன்றைய செய்தி. நாம் எவ்வளவு பொறுப்பாக நடந்துகொள்கிறோமோ அதற்கேற்படி விரைவாக வரவிருக்கும் படிகளைத் தாண்டி சாதாரண நிலைக்குத் திரும்பலாம் என்பதாகும்,” என்று குறிப்பிட்ட சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லொவேன் நாலாவது படியை செப்டம்பர் மாதமளவில் கடக்கலாம் என்று குறிப்பிட்டார். அச்சமயத்தில் பொதுச் சந்திப்புகளில் இருக்கும் எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள், உணவுச்சாலை திறக்கும் நேரக் கட்டுப்பாடுகள் அகற்றப்படும்.
அதையடுத்து ஐந்தாவது படியாக கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சகல கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டு நாடு வழமைக்குத் திரும்பும் என்று அவர் தெரிவித்தார். அந்த நிலைக்குப் போவதற்கு எத்தனை காலம் எடுக்கும் என்பது அதற்கு முன்னால் அறிவிக்கப்படும் நாலு படிகளையும் கடக்கும்போது குடிமக்கள் தமது பொறுப்புக்களை எப்படிக் கைக்கொள்கிறார்கள் என்பதிலேயே இருக்கிறது என்று அவர் கண்டிப்பாகச் சுட்டிக்காட்டினார்.
ஜூலை மாத ஆரம்பம் முதல் தனியார் சந்திப்புக்களில் 8 பேருக்கு அதிகமாகச் சந்திக்கலாம், அதே மாத நடுப்பகுதியிலிருந்து நகரங்கள் தமது கட்டுப்பாடுகளாக அறிமுகப்படுத்தியிருக்கும் பொதுச் சந்திப்புக்கள், திறந்தவெளி அரங்குகள், பூங்காக்களிலிருக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
சுவீடனின் சுமார் பத்து மில்லியன் மக்களில் 44 விகிதமானோருக்கு ஆகக்குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டு விட்டது. கடந்த ஐந்து வாரங்களாக நாட்டில் தொற்றுப்பரவல் மிகவும் வேகமாகக் குறைந்து வருகிறது. அவசரகாலச் சிகிச்சைப் பிரிவில் கொரோனாத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துவிட்டது.
பக்கத்து நாடுகளுக்கான சுவீடன் எல்லைகள் பெரும்பாலும் கொரோனாக் காலத்தில் திறந்தே இருந்தன. அதே போலவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருபவர்களுக்கும் பெரும்பாலும் எல்லைகள் திறந்திருந்தன. ஜனவரியில் தான் வெளியிலிருந்து வரும் சுவீடன் குடிமக்கள் அல்லாதவர்கள் தமக்குத் தொற்று இல்லை என்ற சான்றிதழைக் காட்டவேண்டும் என்ற கட்டாயம் கொண்டுவரப்பட்டது.
மே மாத முடிவில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கான கட்டாய கொரோனா பரீட்சை எல்லைகளில் நிறுத்தப்படும். அதே சமயம் வருபவர்கள் தங்களை ஏழு நாட்களாவது தனிமைப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போதைய வாரத்தில் சுவீடனில் சுமார் 18,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 30 விகிதத்தால் குறைந்திருக்கிறது. தற்போது தொற்று பெரும்பாலும் நாட்டின் வட பகுதியில் வாழ்பவர்களிடையே மட்டும் காணப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100 க்குக் குறைவானது. இதுவரை சுவீடனில் கொவிட் 19 ஆல் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 14,400 ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்