தாய்லாந்து அரசின் கொவிட் 19 தடுப்பு மருந்துத் திட்டத்தை மறைமுகமாக அரசகுடும்பமே கண்டிக்கிறதா?
தாய்லாந்தில் கொரோனாத்தொற்றுக்கள் மூன்றாவது அலையாகப் பரவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் போதாது என்று பல தடவைகள் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பொதுவாகவே அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை அரசு “நாட்டின் அரச குடும்பத்துக்கு எதிரான விமர்சனம்” என்று குறிப்பிட்டுக் கைது செய்து கடுமையான தண்டனைகள் கொடுப்பது வழக்கமாகியிருக்கிறது.
தனது கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாட்டின் முக்கிய நடவடிக்கையாகத் தாய்லாந்து அரசு உள்நாட்டில் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனமொன்றில் நம்பியிருந்தது. ஒரேயொரு தடுப்பு மருந்தில் மட்டும் ஏன் தாய்லாந்து முழுக்க முழுக்க நம்பியிருக்கிறது என்ற கேள்வியும் குறிப்பிட்ட தொழிற்சாலைக்கும் நாட்டின் அரசனுக்குமுள்ள தொடர்பு பற்றியும் நாட்டில் விமர்சனங்கள் எழுந்து வந்திருக்கிறது. முன்னாள் பிரதம மந்திரி வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் தனதூன் யுவான்குரூன்குருவாங்கிட் அதுபற்றிக் கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார்.
ஜூன் மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படுவதாக இருந்த நாட்டின் தடுப்பு மருந்து திட்டம் பெருமளவில் தாமதமாகியிருக்கிறது. தயாரிப்புக்கு எடுக்கப்பட்ட தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் பல பிரச்சினைகளால் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் தரம் மோசமாகி அவை அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே திட்டமிட்டபடி தடுப்பு மருந்துத் திட்டம் ஆரம்பமாகுமா என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது.
இவ்வருட முடிவுக்குள் நாட்டின் 70 % வயதுக்கு வந்தவர்களுக்குத் தடுப்பு மருந்து கொடுப்பது என்பது தாய்லாந்து அரசால் அறிவிக்கப்பட்ட திட்டமாகும். 66 மில்லியன் பேரில் இதுவரை ஒரு மில்லியன் பேருக்கு மட்டுமே தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட நிலையில் நாட்டில் தடுப்பு மருந்துகள் இல்லாத நிலை உண்டாகியிருக்கிறது.
இந்த நிலையில் நாட்டு அரசனின் சகோதரி அரச குடும்பத்தின் கீழ் செயற்படும் விஞ்ஞான பீடத்தின் மூலமாக நாட்டுக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்யும் அதிகாரபூர்வமான கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். நாட்டு மக்களின் நலன் கருதி அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது தடுப்பு மருந்துத் திட்டத்தை விமர்சித்தவர்களின் மீது வழக்குப் போட்டு வரும் தாய்லாந்தின் அரசுக்கு அரச குடும்பத்திலிருந்தே மூக்குடைப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகவே இந்த நடவடிக்கை கவனிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்