கனடாவில் குடியிருப்புப் பாடசாலை இயங்கிவந்த நிலத்தில் சுமார் 215 பழங்குடிக் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
கனடாவின் பழங்குடியினருக்காக நடாத்தப்பட்ட பாடசாலைகளில் ஒன்று Kamloops Indian Residential School ஆகும். பழங்குடியினருக்காக ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரிகளால் நடாத்தப்பட்ட, கனடாவிலேயே மிகப்பெரிய குடியிருப்புப் பாடசாலை என்றறியப்பட்ட பாடசாலை இருந்த இடத்திலேயே குறிப்பிட்ட 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
கத்தோலிக்க திருச்சபையின் இயக்கத்தில் நடாத்தப்பட்ட, கனடாவின் பழங்குடியினருக்கான குடியிருப்புப் பாடசாலைகளில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட “உண்மை விபரங்களை அறிந்துகொள்ளும் குழு” அங்கே திட்டமிடப்பட்ட இன அழிப்பு எவருக்கும் தெரியாமல் நடந்தேறியதாக அறிக்கை சமர்ப்பித்திருந்தது. சுமார் 4,100 க்கும் அதிகமான பிள்ளைகளை இப்படியான பாடசாலைகளில் மிகவும் குரூரமாகக் கையாண்டு கொன்றழித்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. அதையடுத்து அப்படியான பாடசாலையில் நடந்தவைகளைப் புதிய கண்கொண்டும், நவீன தொழில் நுட்பங்களைப் பாவித்தும் கண்டறியும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புக்கூடுகளை ஆராய்ந்ததில் அவை பழங்குடியினருடையவை என்று தெரியவந்திருப்பதாக Tk’emlups te Secwepemc என்ற குறிப்பிட்ட பழங்குடியினர் பிராந்தியத்தின் தலைவர் ரோஸான் கஸிமிர் குறிப்பிட்டார். “கண்டறியப்பட்ட இந்த எலும்புகள் பழங்குடியினர் மீது நடாத்தப்பட்ட அநீதிகளில் ஆவணப்படுத்தப்படாதவை மேலும் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது,” என்று குறிப்பிட்டார்.
கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் சில மூன்று வயதுக் குழந்தைகளினதாகும். அவர்கள் எவரென்று எந்தவித அடையாளமும் இதுவரை தெரியவில்லை. எனவே, இந்த இறப்புக்கள் பதியப்படாதவை என்று தெரியவருகிறது. 1978 இல் மூடப்பட்ட குறிப்பிட்ட குடியிருப்புப் பாடசாலையில் சுமார் 500 பிள்ளைகள் வரை தங்கவைக்கப்பட்டிருந்தார்கள் என்று தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்