பெரும்பாலான வயதுக்கு வந்தவர்களுக்குத் தடுப்பூசிகொடுத்துவிட்ட இஸ்ராயேலில் பிள்ளைகளிடையே தொற்று பெருமளவில் குறைந்திருக்கிறது.
கொவிட் 19 ஆல் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடான இஸ்ராயேல் தடுப்பு மருந்துகளைப் போடுவதில் முதலாவதாகவும் செயற்பட்டது. நாட்டின் சுமார் 60 விகிதமானவர்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளில் இருந்த இஸ்ராயேல் தனது எல்லைகளைத் திறந்து வெளிநாட்டவர்களை வரவேற்பதுடன், உள் நாட்டில் சகஜநிலைக்கும் திரும்பிவிட்டிருக்கிறது.
பெருமளவு வயதுக்கு வந்தவர்கள் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்ட பின் பிள்ளைகளிடையேயும் கொவிட் 19 தொற்று மிகப் பெருமளவில் குறைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. வழமைபோல் பிள்ளைகள் பாடசாலைகளுக்குத் திரும்பிய பின்னரும் அவர்களிடையேயோ நாட்டிலோ கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்கவில்லை. அதனால் நாட்டு மந்தைப் பாதுகாப்பு நிலைமையை அடைந்திருக்கலாம் என்கிறார், எயாம் லெஷம், தொற்றுநோய்கள், தடுப்பு மருந்துகள் மையத்தின் இயக்குனர்.
அதேசமயம், பதின்ம வயதினருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவேண்டும் என்கிறார் எயாம் லெஷம். அதற்குக் காரணம் “அதிக எதிர்ப்புச் சக்திகள் இல்லாத வயதானவர்களையும், வெவ்வேறு காரணத்துக்காக தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளாதவர்களையும் தொடர்ந்தும் காப்பாற்றுவதற்காக பிள்ளைகளுக்கும் தடுப்பூசிகள் கொடுக்கப்படுவது சமூககத்தின் கடமை,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
“முதலில் எமது வயது வந்தவர்களுக்கு தடுப்பூசிகளை முற்றாகக் கொடுத்து முடிக்கவேண்டும். அவர்களைப் பாதுகாப்பது எங்கள் சமூகத்தின் முதலாவது கடமையும், குறியுமாக இருக்கவேண்டும். அதன் பின்பு பிள்ளைகளுக்கும் தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதன் மூலம் எங்கள் சமூகத்தை முழுவதுமாக மந்தைப் பாதுகாப்பு நிலைமைக்கு இட்டுச் செல்லலாம். ஏனெனில், எப்போதுமே தடுப்பு மருந்து எடுக்காத ஒரு சிறு குழு எந்தச் சமூகத்திலும் இருக்கும்,” என்று அவர் விளக்குகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்