ஜோ பைடனின் அடுத்த நிறுத்தம் நாட்டோ அமைப்பின் மையமான பிரசல்ஸ், பெல்ஜியம்.

புதிய அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தனது செய்தியான “அமெரிக்கா மீண்டும் கைகோர்க்க வருகிறது,” என்பதைச் சொல்லவிருக்கும் இடம் நாட்டோ அமைப்பின் மையமாகும். ஜி 7 மாநாடு முடிந்த கையோடு பிரசல்ஸுக்குப் பயணமானார் ஜோ பைடன். திங்களன்று அவர் முதல் முதலாக நாட்டோ நாடுகளின் தலைவர்கள் அங்கே சந்தித்து “அமெரிக்கா மீண்டும் நாட்டோவின் முழு நம்பிக்கைக்குரிய அங்கத்துவர்,” என்று உறுதியளிப்பார்.

“நாங்கள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். 2030 க்கான புதிய, உத்வேகமான, பாதுகாப்புத் திட்டங்களை நாம் ஒன்றிணைந்து உண்டாக்குவோம்,” என்று நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் குறியைப் பற்றி நாட்டோவின் பொதுச் செயலாளர் ஜான் ஸ்டோல்டன்பெர்க் குறிப்பிடுகிறார்.

நாட்டோவின் இதற்கு முந்ததை திட்டம் 2010 இல் அங்கத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது உலகம் இன்றையதைவிட வித்தியாசமாக இருந்தது. ரஷ்யாவுடனான நாட்டோவின் உறவு இன்றிருப்பதுபோல முரண்பட்டதாக இருக்கவில்லை. காலநிலை மாற்றத்தை எதிர் நோக்கும் திட்டங்கள் பற்றிய எண்ணங்களே இருக்கவில்லை. சீனா ஒரு ஆக்கிரமிக்கும் எதிரியாகவோ நோக்கப்படவில்லை. அவைகளைத் தவிர தொலைத்தொடர்பு கருவிகள், டிஜிடல் தாக்குதல்களுக்கெதிராகவும் அரணமைக்கவேண்டிய நிலையில் நாட்டோ இருக்கிறது.

கடந்த ஏழு வருடங்களாகவே நாட்டோ நாடுகளின் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதியதாக முன்வைக்கப்படப்போகும் நாட்டோவின் 2030 க்கான பட்டயம் பெருமளவில் செலவுகளை அதிகரிக்கப்போகிறது என்பது நிச்சயம் என்கிறார் ஜான் ஸ்டோல்டன்பெர்க். ஏற்கனவே நாட்டோவின் குறிக்கோளான “அங்கத்துவர்கள் நாட்டின் மொத்தப் பொருளாதாரப் பெறுமதியின் 2 % ஐ பாதுகாப்புச் செலவுகளுகாக ஒதுக்கவேண்டும்” என்பதை அமைப்பின் மூன்றிலொரு பங்கு நாடுகளே நிறைவேற்றுகின்றன.

அந்த விடயத்தைச் சுட்டிக்காட்டித்தான் டொனால்ட் டிரம்ப் “ஐரோப்பிய நாடுகள் நாட்டோ அமைப்பிற்கான செலவுகளில் தமது பங்கைச் செய்யாவிட்டால் அமெரிக்கா நாட்டோவிலிருந்து விலகும்,” என்று கண்டிப்பாக அவர் சொல்லியிருந்தது நாட்டோவின் ஐரோப்பிய அங்கத்தவர்களுக்கு ஒரு பெரிய இடியாக இருந்தது.

பாதுகாப்புச் செலவுகளைப் பங்கிடும் விடயத்தில், ஜோ பைடன் குறிப்பிடப்போவதும் அதுவே என்றாலும் அவரது செய்தியில் அமெரிக்கா முழுமனதுடன் ஒத்துழைக்கும் என்பதாகவும் இருக்கும்.

அமெரிக்காவுடன் சமீப ஆண்டுகளில் மண்டையை முட்டிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய நாட்டோ அங்கத்தவர் துருக்கியாகும். எர்டகானுக்கும், டொனால்ட் டிரம்ப்புக்குமிடையிலான மனக்கசப்புக்கள் அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதங்களை விற்க மறுத்தது, பதிலாக துருக்கி ரஷ்யா பக்கம் சாய்வது, சிரியா போரில் அமெரிக்காவுக்கு எதிரான பக்கம் சாய்வது போன்றவற்றால் சிதிலமடைந்திருக்கிறது.

முதல் தடவையாக ஜனாதிபதி ஜோ பைடனை நேருக்கு நேர் சந்திக்கமுதலேயே “அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து அகற்றும்போது அங்கே ஒரு ஸ்திரமான நட்பு அவர்களுக்குத் தேவை. நாம் அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் அமைதி உண்டாக்கும் முயற்சியில் ஆதரவளிப்போம்,” என்று அறிக்கை விட்டிருக்கிறார் எர்டகான். துருக்கி முன்வைக்கவிருக்கும் “ஆப்கானிஸ்தான்” பற்றிய திட்டங்களை வெளிப்படுத்த மறுத்த எர்டகான் “எமது பொறுப்பை நாம் எடுக்கத் தயாராக இருப்பது பற்றி அமெரிக்காவும், நாட்டோவும் சந்தோசமடையவேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *