“கௌரவச் சின்னம் என்ற புகழாரத்துடன் எர்டகான் 2019 இல் திறந்து வைத்த பொழுதுபோக்கு மையம் குப்பைமேடாகியிருக்கிறது.

துருக்கியில் அங்காரா நகரத்தில் “Wonderland Eurasia” என்ற பெயரில் 2019 மார்ச் மாதம் துருக்கிய ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது. தனியார் நிறுவனமொன்றிடம் இயக்குவதற்காகக் கையளிக்கப்பட்ட அந்த உல்லாசப் பயண மையம் பெபரவரி 2020 இல் தனது மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த வசதியில்லாததால் நிரந்தரமாக மூடப்பட்டது.

தனது ஆட்சியில் பாரிய திட்டங்களை அரச செலவில் கட்டியெழுப்பித் தனது பெயரைச் சரித்திரத்தில் பதிக்கவேண்டுமென்ற எண்ணத்தில் எர்டகான் செயற்பட்டு வருவதாகப் பலராலும் விமர்சிக்கப்படுகிறார். அப்படியான பல திட்டங்கள் ஏகப்பட்ட செலவின் பின்னர் இடையில் கைவிடப்படுவது, முடிந்தபின் பயனில்லாமல் போவதும் வழக்கம் என்று அவரது விமர்சகர் சுட்டிக்காட்டுவதுண்டு. அவைகளில் அதி முக்கியமானது அங்காபார்க் அல்லது “Wonderland Eurasia” என்ற பெயரில் 801 மில்லியன் டொலர் செலவில் கட்டியெழுப்பப்பட்டுக் கைவிடப்பட்டிருக்கும் திட்டம் என்கிறார்கள்.

உலகத்தில் இரண்டாவது அதிகமான அளவுக்கதிகமான “மலையிலிருந்து பாதாளத்துக்கு விழும்” [roller coaster] இயந்திரங்கள் அந்த சுற்றுலா மையத்தில் ஸ்தாபிக்கப்பட்டன. ஆரம்பித்து வைக்கப்பட்ட இரண்டாவது நாளன்றே அவ்வியந்திரங்களிலொன்று உடைந்துபோய் அங்கே வந்திருந்தவர்களுக்கு ஆபத்தானது. 

சுற்றுலா மையத்தின் மலசலகூடங்கள் ஒழுங்காக இயங்காததால் அப்பகுதியெங்கும் அழுக்கானது. அந்தச் சுற்றுலா மையத்திலிருந்த மற்றும் பல இயந்திரங்கள், பொம்மைகளும் ஒவ்வொன்றாக உடைந்தோ, பாவிப்புக்கு உகந்தவை இல்லாதவையாகவோ ஆகின. பத்து மில்லியன் பயணிகள் அங்கே வருவார்கள் என்று கட்டப்படும்போது குறிப்பிடப்பட்டது. ஆனால், அதன் சிறு பகுதிகூட அங்கே வராததால் இயக்கியவர்களை அதைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை.

சுற்றுலா மையத்தின் கிலோ மீற்றர்கள் பிராந்தியமெங்கும் பெரும் செலவில் உண்டாக்கப்பட்ட இயந்திரங்களும், பொம்மைகளும் மற்றும் இயந்திரங்களின் பாகங்களும் பாவிப்பின்றி குப்பைகளாகிக் கிடக்கிறது. அதைக் கட்டியெழுப்புவதிலும், வேறு பல திட்டங்களையும் அங்காரா நகரில் உண்டாக்குவதாகச் சித்தரித்து வந்த நகரபிதா அவைகளில் பெரும்பாலானவை தோல்வியடைந்ததால் மக்களின் பெரும் எதிர்ப்பைப் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார்.

தற்போதைய நகரம் அந்தச் சுற்றுலா மையத்தின் நிலத்தை வேறு தேவைகளுக்காகப் பாவிக்க அதைத் தன் கையகப்படுத்த நீதிமன்றத்தில் போராடி வருகிறது. அங்கிருக்கும் இயந்திரங்களின் பாகங்களைத் திருடுவதற்காகப் பலர் பலதடவைகள் முயற்சி செய்து வருவதாகத் தெரியவந்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *