தனது 18 வயதில் அரசு தரவிருக்கும் அரசகுமாரிக்கான மான்யத்தை ஏற்க மறுத்திருக்கும் எதிர்கால நெதர்லாந்து மகாராணி.

நெதர்லாந்துப் பிரதமருக்கு நாட்டின் எதிர்கால மகாராணி கத்தரீனா அமாலியா தனது கைப்படக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார். கடிதத்தில் அவர் அறிவித்திருக்கும் விடயம் பலரையும் வியக்கவைத்திருக்கிறது. இவ்வருடம் டிசம்பர் 7 ம் திகதி 18 வயதாகவிருக்கும் அவருக்கு அரசு கொடுக்கவிருக்கும் மான்யத்தை மறுத்தே அவர் கடிதமெழுதியிருக்கிறார்.

“நான் எதையுமே பதிலுக்குச் செய்யாத நிலையில் அரசிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வது எனக்கு ஏற்புடையதல்ல. மற்றும் பல மாணவர்கள் என்னைவிடக் கடினமான வாழ்வை எதிர்கொள்கிறார்கள். முக்கியமாகக் கொரோனாத் தொற்றுக்களின் இக்காலம் அவர்களுக்குக் கடினமானது. எனது இளவரசிப் பணி எனக்குப் பெரும் செலவுகளைத் தரும் நிலைமை வரும்வரை நான் எந்தவித மான்யத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை,” என்று கத்தரீனா அமாலியா எழுதியிருக்கிறார்.

இளவரசி சமீபத்தில்தான் தனது உயர்தர வகுப்பை Christelijk Gymnasium Sorghvliet கல்லூரியில் முடித்திருக்கிறார். தான் பல்கலைக்கழகத்திற்குப் போகமுதல் ஒரு வருடம் கல்வியிலிருந்து விடுமுறை பெற்றுக்கொள்ளப்போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வருடத்தில் அரச குடும்பத்தினரின் உதவியின்றி 400,000 டொலர்கள் பெறுமதியான தனது கல்விக்கான கடனைத் திருப்பிச் செலுத்துவார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இளவரசி 18 வயதானவுடன் வருடாவருடம் பெறும் மான்யம் சுமார் 1.9 மில்லியன் டொலராகும். நெதர்லாந்தின் அரசகுடும்பம் மக்களிடையே தமது வரவேற்பை இழந்துவரும் இச்சமயத்தில் அரசகுமாரி இந்த முடிவை எடுத்திருக்கிறார். கடந்த வருடம் நாட்டில் கொரோனாத் தொற்றுக்கள் பரவியிருந்த சமயம் அரசகுடும்பத்தினர் கிரீஸுக்குச் சுற்றுலா போயிருந்தது நாட்டின் மிகப் பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது. வேறு வழியின்றி விடுமுறையை இடையில் முடித்துக்கொண்டு அரசன் வில்லியம் அலெக்ஸாண்டரும், அரசி மக்ஸீமாவும் பிள்ளைகளுடன் நாடு திரும்பினார்கள்.

https://vetrinadai.com/news/mark-election/

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *