எவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் பக்ராம் விமானத் தள முகாமைவிட்டு வெளியேறிவிட்டது அமெரிக்க இராணுவம்.
“அமெரிக்க இராணுவத்தினரின் பலத்துடன் எங்களைக் கொஞ்சமும் ஒப்பிட முடியாது. எங்களிடமிருக்கும் வசதிகள் மிகக் குறைவானவை. நாம் எங்களால் முடிந்த அளவு பாதுகாப்பையும், எங்கள் சேவைகளையும் தொடருவோம்,” என்கிறார் பக்ராம் இராணுவ முகாமின் புதிய தளபதி மிராசதுல்லா கோஹிஸ்தானி.
எந்த முறையில், எப்போது பக்ராம் இராணுவ முகாமை விட்டு விலகுவது என்பது பற்றி எந்த விதமான கூட்டுறவுத் திட்டங்களும் இருக்கவில்லை என்று தனது பொறுப்பை எடுத்தபின் தளபதி கோஹிஸ்தானி நிருபர்களிடம் குறிப்பிட்டார். எனவே, அமெரிக்க இராணுவத்தினர் அங்கிருந்து முழுவதுமாக விலகியபின்னரே தாங்கள் அது நடந்திருப்பதாக அறிந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
முழுவதுமாக பக்ராம் இராணுவத் தளத்தைக் கைவிடுதலுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் என்றிருந்தது. அதை எப்படிப் படிப்படியாகச் செய்வது, இலக்கங்களையும், பலத்தையும் குறைக்கும்போது மிச்சமிருப்பவர்களுக்கு யார் பாதுகாப்புக் கொடுப்பது போன்ற கேள்விகள் எழுந்தவண்ணமிருந்தன. ஆனால், அவைகளுக்கான பதில்கள் அமெரிக்கா கொடுக்கவில்லை.
திடீரென்று வெள்ளியன்றே தாம் பக்ராம் விமானத் தளத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. “அமெரிக்கர்கள் இங்கிருந்து போய்விட்டதாக நாம் மற்றவர்கள் கூறிய தகவல்கள் மூலம் அறிந்து காலையில் வந்து பார்த்தபோது இங்கே எவருமில்லை,” என்கிறார் கோஹிஸ்தானி.
தற்போதைய ஆப்கானியத் தளபதியின் கட்டுப்பாட்டிலிருப்பது 3,000 ஆப்கான் இராணுவத்தினராகும். அந்த முகாம் நாட்டின் தலைநகரான காபுலுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருக்கிறது. அத்துடன் சமீப வாரங்களாக வடக்கில் தலிபான் இயக்கத்தினர் படிப்படியாகக் கைப்பற்றி வரும் பகுதிகளுக்கான பாதுகாப்பைக் கொடுப்பதற்கும் பக்ராமிலிருந்தே இராணுவம் போகவேண்டும்.
பக்ராம் முகாமை அவர்கள் நிச்சயமாகத் தாக்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அதற்கான திட்டங்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருவதாக உளவுச் செய்திகள் மூலம் தெரியவருவதாகவும் கோஹிஸ்தானி குறிப்பிடுகிறார். அப்படியான தாக்குதல்களைச் சமாளிக்கவும், முகாமுக்குள்ளிருக்கும் சிறைக்குள் வாழும் 5,000 தலிபான்களைக் கட்டுப்படுத்தவும் தனது படையால் முடியுமென்றும் அவர் தெரிவிக்கிறார்.
“தலிபான்கள் தாக்கும்போது நாம் சரணடையப் போவதில்லை. ஆனால், எங்களுடைய தலைவர்கள் எங்களுக்குத் தேவையான ஆயுதங்களையும், வசதிகளையும் செய்துதரவேண்டியது அவசியம்,” என்கிறார் கோஹிஸ்தானி.
சாள்ஸ் ஜெ. போமன்