ஆப்கானிஸ்தானிலிருக்கும் தமது உத்தியோகத்தர்களைத் திரும்பக் கொண்டுவரலாமா என்று யோசிக்கிறது இந்தியா.
கடந்த சில மாதங்களாகவே தலிபான் இயக்கங்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பிராந்தியங்களைத் தாக்கிக் கைப்பற்ற ஆரம்பித்து விட்டன. அவர்களுடனான அமைதி ஒப்பந்தத்தின்படி அங்கிருக்கும் வெளிநாட்டுப் படைகள் வெளியேறவேண்டும் என்ற நிலைமையில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தமது இராணுவத்தினரை அங்கிருந்து அகற்றிவிட்டது. அதே போலவே நாட்டோ துருப்புக்களும் அகற்றப்பட்டன.
https://vetrinadai.com/news/us-left-bagram-kohistani/
ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினரைத் தவிர வெவ்வேறு அபிவிருத்தித் திட்டங்களிலும், சேவைகளிலும் பணியாற்றும் பல நாட்டவர்களும் இருக்கிறார்கள். சுமார் 500 இந்தியர்கள் மாஸார், கந்தஹார், காபுல் ஆகிய நகரங்களிலிருந்து இந்தியச் செயலகங்கள், தூதுவராலயங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானின் வடக்கிலிருக்கும் பகுதிகளில் தலிபான்கள் கைப்பற்றியதுடன் பீதியுற்ற மக்கள் அங்கிருந்து தப்பியோடுகிறார்கள். அவ்வப்பகுதி முகாம்களில் இருந்த ஆப்கானிஸ்தான் படைகளோ தாஜிகிஸ்தானுக்குத் தப்பியோடியிருக்கின்றன. துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகள் தமது தூதுவராலயங்களை மூடிவிட்டுத் தமது நாட்டவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டன.
ஜலாலாபாத், ஹேரத் ஆகிய நகரங்களிலிருந்த இந்தியக் காரியாலயங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. மீதியிருப்பவர்களைக் இந்தியாவுக்குக் கொண்டுவருவது பற்றி வெளிவிவகார அமைச்சர் யோசிப்பதாகத் தெரிகிறது. ரஷ்யாவுக்கு வரும் நாட்களில் விஜயம் செய்யும் அவர் அந்த நாட்டு அரசியல் மட்டத்திலும் அதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவார்.
சாள்ஸ் ஜெ. போமன்