அணிவகுப்பை சுகாதாரப் பாஸுடன் பொது மக்கள் பார்வையிட அனுமதி.
பிரான்ஸின் பாரம்பரிய சுதந்திர தின அணிவகுப்புகள் புதனன்று நடைபெறவுள்ளன. avenue des Champs-Elysées தெருவில் இடம்பெறுகின்ற படைகளது அணிவகுப்புக் காட்சிகளைப் பார்வையிடுவவதற்கு இந்த முறை பொதுமக்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். பார்வையாளர்களுக்கு மாஸ்க், சுகாதாரப் பாஸ்(pass sanitaire) என்பன கட்டாயம் ஆகும்என்று பாரிஸ் பொலீஸ் தலைமையகம்அறிவித்துள்ளது.
11 வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டமைக்கான சுகாதாரப் பாஸ், தொற்று இல்லை என்பதை நிரூபிக்கின்ற சோதனை அறிக்கை, தொற்றில் இருந்து மீண்டமைக்கான சான்றிதழ் இவை மூன்றில் ஒன்றை வைத்திருப்பது கட்டாயமாகும். (vaccination complète, test négatif, test prouvant un rétablissement au Covid-19) வைரஸ் தீவிரம் காரணமாக கடந்த ஆண்டு சுதந்திரதின அணிவகுப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடைபெற்றது. அழைக்கப்பட்ட பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த முறை பார்வையாளர்கள் சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் கலந்துகொள்ள முடியும்.
4ஆயிரத்து 300 படைவீரர்கள், 71 விமானங்கள், 25 ஹெலிக்கொப்ரர்கள், 221 வாகனங்கள், 200 குதிரைகள் இந்தமுறை அணிவகுப்பில் உள்ளடங்கி இருக்கும்.”Griffon armored”எனப்படும் புதிய தலைமுறை துருப்புக் காவி கவச வாகனங்கள், ஆபிரிக்காவின் சாஹல் படைநடவடிக்கையில் பங்குபற்றிய புதியCaRaPACE armored tanker ஆகியன முதல்முறையாக இம்முறை கண்காட்சியில்இடம்பெறவுள்ளன.சுமார் இரண்டு மணி நேரம் நீடிக்கின்ற படைகளது அணிவகுப்புக்களை அதிபர் மக்ரோன் ஏற்றுக் கொள்வார்.
ஆபிரிக்காவில் தகுபாவை தளமாகக் கொண்டு இயங்குகின்ற ஐரோப்பியவிசேட படைப்பிரிவு (European special forces – Takuba) இந்த முறை நிகழ்வில்பிரதான பங்கு வகிக்கவுள்ளது.
சுதந்திர நாளை ஒட்டி அன்றிரவு ஈபிள் கோபுரம் பகுதியில் இடம்பெறுகின்ற கண்கவர் வாணவேடிக்கை le feu d’artifice நிகழ்வினையும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்த நிலையில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 35 நிமிடங்கள் நீடிக்கின்ற அந்த வாண வேடிக்கை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும். அதேசமயம் டெல்ரா உட்பட புதிய வைரஸ் தொற்று அபாயம் காரணமாக நாட்டின் பல நகரங்களில் வாணவேடிக்கைக் கொண்டாட்டங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
தீயணைப்பு வீரர்களால் பாரிஸின் 92, 93 94 மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்படுகின்ற சாகச தீயணைப்பு நிகழ்வுகள் (bal des pompiers) சுகாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டும் நடைபெற மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.