பிரிட்டன், சுவீடன் நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்படுகின்றன.
ஜூலை 19 முதல் நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றிவிடுவதென்று அறுதியாகத் தீர்மானிக்கப்பட்டுப் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டது. ஒரு பகுதி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சேவையாளர்கள் செய்துவரும் கடுமையான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு அத்தீர்மானத்தை போரிஸ் ஜோன்சன் அறிவித்தார். பொதுப் போக்குவரத்தில் சுவீடன் அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் ஜூலை 15 முதல் அகற்றப்படுகின்றன. அதையடுத்து பொது போக்குவரத்து வாகனங்கள் தமது முழு இடங்களுக்கும் பயணிகளை அனுமதிக்கலாம்.
அதிகரித்துவரும் கொரோனாத் தொற்றுக்களைச் சுட்டிக்காட்டி “மோசமான இவ்வியாதி இன்னும் ஓயவில்லை. மக்கள் தொடர்ந்தும் கவனமாக புளங்கவேண்டும்,” என்று குறிப்பிட்ட போரிஸ் ஜோன்சன் நாட்டின் இரவு விடுதிகளெல்லாம் திறக்கப்படுமென்று அறிவித்திருக்கிறார். தொடர்ந்தும் கொவிட் 19 உயிர்களைப் பறிக்கப் போகிறது என்று குறிப்பிட்ட அவர் எனினும் முன்னோக்கிப் போவதற்கான காலம் வந்துவிட்டது என்றார்.
சுவீடனைப் பொறுத்தவரை வயது வந்தவர்களில் 70 விகிதமானவர்களும், பிரிட்டனில் 89 விகிதமானவர்களும் ஆகக்குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது எடுத்துவிட்டிருக்கிறார்கள். 66 % பிரிட்டர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்திருக்கிறார்கள். 35 % பேர் சுவீடனில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்கிறார்கள்.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் வித்தியாசமான கொரோனாத் திரிபுகள் நாட்டுக்குள் வரலாம் என்று எச்சரிக்கிறார் சுவீடனின் தொற்றுநோய்ப் பரவல் கட்டுப்பாட்டுத் திணைக்களத் தலைவர் ஆண்டர்ஸ் திங்னல். எனவே சில வாரங்களுக்கு முன்னர் நாட்டுக்குள் வருபவர்கள் எல்லைகளில் கொரோனாப் பரிசீலனை செய்துகொள்ளவேண்டும் என்று அறிவித்தார். பொதுப் போக்குவரத்துகளை விட உணவகங்களில் கொரோனாத் தொற்றும் அபாயம் அதிகமிருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஆனாலும், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லையென்பதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல் தம்மளவில் பொறுப்பெடுத்து இடைவெளி பேணுவது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
தொற்றுக்குள்ளாபவர்களுக்கும், கடும் சுகவீனமடைபவர்களுக்கும் இடையேயான தொடர்பு பெருமளவில் குறைந்துவிட்டது. பிரிட்டனில் தினசரி புதிய 30,000 தொற்றுக்களாக இருந்தது இப்போது 100,000 ஆகியிருக்கிறது. ஆனாலும், அது நாட்டின் மருத்துவ மனைகளில் அவசரச் சிகிச்சை பெறவேண்டியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காது என்று தான் நம்புவதாக பிரிட்டனின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சாஜித் தாவித்.
சாள்ஸ் ஜெ. போமன்