ஈராக்கில் மீண்டுமொரு கொவிட் 19 மருத்துவ மனையில் தீவிபத்து, இம்முறை நஸ்ஸிரியாவில்.
ஈராக்கின் நஸ்ஸிரியா நகரின் கொவிட் 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்துவரும் மருத்துவசாலையில் ஏற்பட்ட தீவிபத்தொன்றில் இதுவரை சுமார் 92 பேர் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவர்களைத் தவிர மேலும் பலரும் காணாமல் போய்விட்டதாக அங்கே விபத்துக்குப் பின்னர் வந்திருக்கும் உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஈராக்கில் இதுபோன்ற மருத்துவசாலையில் விபத்து ஏற்படுவது இது முதல் தடவையல்ல.
அந்தக் கொடும் நோய்க்குள்ளாகிக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், ஓரளவு பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் வைத்திருக்கப்பட்டவர்களும் தீவிபத்து ஏற்பட்டபோது கட்டடத்துக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். அவர்களைத் தவிர மருத்துவ சேவையாளர்கள் சிலரும் இறந்திருக்கிறார்கள். மாட்டிக்கொண்டவர்களைக் காப்பாற்றுவதில் தீவிபத்துச் சமயத்தில் சிலர் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டதாகப் பாராட்டப்படுகிறார்கள்.
அந்த மருத்துவமனை இயக்குனர், பாதுகாப்பு அலுவலர் ஆகியோரை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்கிக் கைதுசெய்யுமாறு நாட்டின் பிரதமர் முஸ்தபா அல் கதீமி உத்தரவிட்டிருக்கிறார். தீயணைக்கும்படை அந்த நெருப்பை அணைத்துக் கட்டுக்குள் கொண்டுவந்த பின்பு மருத்துவசாலையின் பகுதிகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கக் கட்டடத்திலிருந்து தொடர்ந்தும் எரியும் புகை வெளிவந்துகொண்டிருப்பதாகச் சாட்சிகள் செய்திகளுக்குக் குறிப்பிட்டு வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் பாக்தாத் மருத்துவமனையொன்றில் நடந்தது போலவே பிராணவாயுக் கொள்கலங்களே வெடித்துத் தீவிபத்து உண்டாகியதாகச் சாட்சிகள் மூலம் தெரியவருகிறது. விபத்து நடந்த இடத்துக்கு வந்த உறவினர்கள் கோபத்தில், வாசலில் நின்ற பொலீஸ் வாகனங்களுக்குத் தீ வைத்தார்கள் என்றும் பொலீசார் தெரிவிக்கின்றனர்.
சாள்ஸ் ஜெ. போமன்