முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா சிறைத்தண்டனையால் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம், இறப்புகள்.
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல் குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்து வருகிறார். அதனால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் அதை எதிர்த்து க்வாஸுலு – நத்தால், ஜோகான்னஸ்பெர்க் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடாத்திக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஸுமாவின் ஆதரவாளர்கள் செய்துவரும் ஆர்ப்பாட்டங்கள், அழிவுகளைத் தடுக்க நாட்டின் பொலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றன. தீவைப்புக்கள், கொள்ளை, கொலைகள், கட்டடங்களுக்குச் சேதமிழைத்தல் ஆகியவை நாட்டின் மற்றைய பாகங்களுக்குப் பரவாமல் தடுப்பதில் அவர்கள் ஸூமா ஆதரவாளர்களோடு மோதவேண்டியதாக இருக்கிறது.
ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்த முதல் சில நாட்களிலேயே அவர்களிடையேயான மோதலில் சுமார் 72 பேர் இறந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“ஜனநாயக நாடொன்றில் இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடுவதை நாம் அனுமதிக்க முடியாது. தனிப்பட்ட நபருக்காக எவரும் சட்டத்தைக் கையிலெடுக்கலாகாது” என்று குறிப்பிடும் பொலீஸ் அமைச்சர் பேக்கெ ஸேலெ 2,500 இராணுவத்தினரையும் வன்முறைகளை அடக்குவதற்காக அனுப்பியிருக்கிறார்.
ஸுமாவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் என்று நடப்பவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியே அது வளர்ந்து மேலும் பரவக் காரணமாக இருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். கொரோனாக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி நாட்டில் பலரின் வாழ்வாதாரத்தை இழக்கவைத்திருக்கிறது.
“நாட்டின் நிலைமையால் எங்கள் மீது அதிருப்தியடைந்திருப்பவர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதைச் சில குற்றவியல் குழுக்கள் தமது கொலை, கொள்ளைகளுக்கு உபயோகிக்கிறார்கள். எங்களுடைய நாட்டில் நாம் ஏற்படுத்தியிருக்கும் ஓரளவு ஸ்திரமான நிலைமையை மீண்டும் இழந்துவிட்டால் ஒரு சமத்துவமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது,” என்று ஒரு தொலைக்காட்சி உரையில் நாட்டின் ஜனாதிபதி சிரிஸ் ரம்போசா மக்களிடம் அமைதியை வேண்டுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்