மேலுமொரு எல்லைக்காவல் நிலையம் தலிபான்களின் காலடியிலா?
இம்முறை தலிபான்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பது ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லையிலாகும். ஏற்கனவே தார்ஜிகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், துருக்மேனிஸ்தான் – ஆப்கானிஸ்தான், ஈரான் – ஆப்கானிஸ்தான் எல்லைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கும் தலிபான் இயக்கத்தினரின் கொடி ஸ்பின் போல்டாக் எல்லைக்காவல் நிலையத்திலும் பறக்கவிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயிருக்கும் அந்த எல்லை ஆப்கானிஸ்தான் அரசுக்கு அரசியல், பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு காவல் நிலையமாகும். கந்தகார் பகுதியிலிருக்கும் அந்த நகரில் தலிபான் இராணுவத்தினர் ஆயுதபாணிகளாகத் திரிவதும், எல்லைக் காவலில் அவர்களின் கொடி பறப்படும் சமூகவலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன. ஆனால், ஒரு சில ஆப்கான் அதிகாரிகள் அந்தப் பகுதி தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டிலிருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஸ்பின் போல்டாக் எல்லையை அடுத்துப் பாகிஸ்தான் பகுதியிலிருக்கும் துறைமுகத்தை நோக்கித் தினசரி சுமார் 900 பாரவண்டிகள் போவதுண்டு. அவைகளிடம் வரி அறவிடுவதன் மூலம் தலிபான் இயக்கத்தினர் தமது பொருளாதாரத்தைப் பலப்படுத்திக்கொள்ளலாம். அத்துடன் அந்த எல்லை மூலம் ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்படும் போதைப்பொருட்கள் உலகின் மற்றைய நாடுகளுக்குப் போகின்றன.
செப்டெம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு இராணுவத்தை அனுப்பிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் வாங்கியது பற்றித் தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார். அவர் ஆப்கானிய பெண்கள், சிறுமிகளின் நிலையைச் சுட்டிக்காட்டிக் கவலை தெரிவித்திருக்கிறார்.
“பாவம் அவர்கள், அந்த மோசமான மனிதர்களின் கைகளில் அவர்கள் அகப்பட்டு ஒழித்துக்கட்டப்படப்போகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய அரசியல் தவறு,” என்று அவர் நேர்காணலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்