தலையை மூடும் முக்காடுகள் போன்ற மத அடையாளங்களை வேலை செய்யுமிடத்தில் தடுப்பது சட்டபூர்வமானதே என்றது ஐரோப்பிய நீதிமன்றம்.
வேலைத்தளங்களில் மதச்சார்பற்ற அடையாளத்தைக் காட்ட, சமூக அமைதியை நிலைநாட்டும் எண்ணத்துடன் நிறுவனங்கள் ஹிஜாப் போன்ற மத அடையாளங்களைத் தடை செய்யலாம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் (ECJ) குறிப்பிட்டிருக்கிறது. அதைச் செய்யும் நிறுவனங்கள் அதன் நோக்கம் குறிப்பிட்ட மதங்களை ஒடுக்குவதற்காக அல்ல என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
எனவே நேரடியாகத் தமது கொள்வனவாளர்களைச் சந்திக்கும் நிறுவனங்கள் ஹிஜாப் போன்ற அடையாளங்களை வேலைத்தளத்தில் தவிர்க்க மறுக்கும் பட்சத்தில் அவர்களை வேலையிலிருந்து நிறுத்தலாம். குறிப்பிட்ட தீர்ப்பின்படி ஹிஜாப் மட்டுமன்றி சிலுவை, துர்பான் போன்ற மற்றைய மத அடையாளங்களையும் தமது வேலையிடங்களில் நிறுவனங்கள் தடைசெய்யலாம்.
ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்த முடிவைப் பல இஸ்லாமியப் பெண்களும், அமைப்புக்களும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். சமூக வலைத் தளங்களிலும், அவர்களுடைய அறிக்கைகளிலும் அந்த முடிவு வெவ்வேறு விதமாக எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது. இஸ்லாமோபோபியா என்ற இஸ்லாமுக்கு எதிரானவர்களுக்கு இந்த முடிவு துணைபோகிறது என்று சிலர் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்