பத்தாம் வகுப்புப் பரீட்சையில் வெற்றிபெறாதவர்களுக்குக் குடும்பத்துடன் இலவசமாகக் கோடைக்கானலில் விடுமுறை.
பத்தாம் வகுப்புத் தேர்தலில் சித்திபெறாததால் மனமுடைந்திருக்கும் மாணவர்களைத் தேற்றி மீண்டும் உற்சாகம் கொடுக்க கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் கொடைக்கானலிலிருக்கும் தனது விடுமுறை தலங்களில் அவர்களை இரண்டு நாட்கள் குடும்பத்தினருடன் இலவசமாகத் தங்க வரும்படி கேட்டுக்கொள்கிறார். புதனன்று தனது திட்டத்தைச் சமூகவலைத் தளங்களில் அறிவித்த சுதீஷை அதுபற்றி அறிய மாணவர்கள், கல்வியாளர்கள் தொலைபேசியில் அழைத்தபடியே இருக்கிறார்கள்.
“பத்தாம் வகுப்புப் பரீட்சையில் சித்தியெய்தியதற்காகப் பல மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலைகள் பீற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்பரீட்சையில் தோல்வியடைந்து, மனம் தளர்ந்து, சுற்றியிருப்பவர்களால் இழிவுசெய்யப்படுகிறவர்களைப் பற்றிப் பலரும் சிந்திப்பதில்லை. எனவே, அவர்களுக்கு மீண்டும் உற்சாகம் கொடுக்கவே நான் இதைச் செய்ய விரும்பினேன்,” என்கிறார் சுதி என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த நல்ல மனதுள்ளவர்.
2003 இல் கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு வந்து ஹோட்டல்துறையில் கல்விபெற்று “ஹம்மொக்” என்ற பெயரில் தங்கும் விடுதிகளை ஆரம்பித்து நடத்தி வருகிறார் சுதி. ஜூலை மாத இறுதிவரை தனது அறிவிப்பு திறந்திருக்கும் என்கிறார் அவர். பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்ததற்கான ஆதாரத்தைக் காட்டி மாணவ, மாணவிகள் அவரது விடுதிக்கு தமது பெற்றோருடன் வந்து தங்கலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்