தனிமைப்படுத்தப்பட்ட பிரதமரின் பிரிட்டன் இன்று கொரோனாக் கட்டுப்பாடுகளிலிருந்து பிரியாவிடை பெறுகிறது.
கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருக்கும் பிரிட்டன் மக்கள் ஆரோக்கிய அமைச்சரை அருகில் சந்தித்ததால் தன்னைத் தனிமைப்படுத்தியிருக்கிறார் போரிஸ் ஜோன்சன். அந்த நிலைமையில் இன்றிரவு முதல் பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகள் பிரிட்டனில் விலக்கப்படுகின்றன. “சுதந்திர தினம்” என்று இத்தினத்துக்கு பிரிட்டன் ஊடகங்கள் சில பெயரிட்டிருக்கின்றன.
ஜனவரி மாதத்துக்கு இணையாகத் தொற்றுக்கள் வேகமாகப் பரவிவரும் இந்த நாளை “முட்டாள்கள் தினம்” என்கிறார்கள் ஒரு பிரிவு மருத்துவ சேவையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும். டெல்டா திரிபு தான் ஆறு மாதங்களுக்குப் பின்னர் பிரிட்டனில் படுவேகமாகப் பரவிவருவதற்குக் காரணமாகும்.
சஜீத் ஜாவித்துடன் பழகியதால் தமது சுதந்திரத்தை இழக்கவேண்டிய நிலையிலுள்ள பிரதமரும், பொருளாதார அமைச்சரும் தங்களைத் தினசரி பரிசீலித்துக்கொண்டு தனிமைப்படுத்தாமல் வேலைகளில் ஈடுபடப்போவதாக முதலில் அறிவித்திருந்தார்கள். உடனே, நாட்டில் எழுந்த பெரும் எதிர்ப்புக்களால் தமது எண்ணத்தை மற்றிக்கொண்டார்கள் ஜோன்சனும், ரிஷி சுனாக்கும்.
பிரிட்டனில் கட்டுப்பாடுகள் அகற்றப்படும் அதே தருட்ணத்தில் வேல்ஸும், ஸ்கொட்லாந்தும், வட அயர்லாந்தும் பல கட்டுப்பாடுகளைத் தொடர்கின்றன. ஸ்கொட்லாந்தில் முகக்கவசக் கட்டாயம் தொடர்கிறது, இரவு உல்லாச விடுதிகள் தொடர்ந்தும் மூடியிருக்கும். பிரிட்டனிலும் பலர் அதுபோலவே கவனமாக இருக்கவேண்டுமென்கிறார்கள்.
ஐக்கிய ராச்சியத்தில் வயதுக்கு வந்தவர்களில் 88 விகிதமானவர்கள் ஒரு தடுப்பூசியும், 68 விகிதத்தினர் இரண்டு தடுப்பூசியையும் பெற்றிருக்கிறார்கள். காட்டுத்தீ போலத் தொற்றுக்கள் பரவினாலும் கடும் வியாதிக்குள்ளாகி அவசர மருத்துவ சேவையை வேண்டுபவர்கள் தொகை குறைந்திருக்கிறது. பொருளாதார சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதும் அவசியம் என்பதையும் பிரிட்டிஷ் அரசு கட்டுப்பாடுகள் தளர்த்துவதற்குக் காரணமாகக் காட்டுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்