நபியின் உருவங்களை வரைந்து பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய டென்மார்க் கார்ட்டூனிஸ்ட் மறைவு.
முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வரைந்து உலகெங்கும் பதற்றத்தையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திவந்த டென்மார்க் நாட்டின் கேலிச் சித்திர ஓவியர்கர்ட் வெஸ்டர்கார்ட் (Kurt Westergaard)தனது 86 ஆவது வயதில் காலமானார்.
டெனிஷ் நாட்டின் “யூலன்ட் போர்ஸ்டன்”(Jyllands-Posten) நாளிதழில் 2005 ஆம்ஆண்டில் “முகமது நபியின் முகங்கள்”என்ற பெயரில் அவர் வரைந்த 12 கேலிச்சித்திரங்கள் முஸ்லிம் நாடுகள் பலவற்றில் பெரும் வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தன.
முகமது நபியை வெடிகுண்டு வடிவிலான தலைப்பாகையுடன் சித்தரிக்கின்ற அந்தக் கேலிச் சித்திரங்கள் ஆரம்பத்தில் பெரிதும் கவனத்தை ஈர்த்திராத போதிலும் டென்மார்க் தலைநகரில் அதற்கு எதிராகப் பல நாட்கள் நடந்த ஆர்ப்பாட்டங்களும் முஸ்லிம் நாடுகள் சிலவற்றின் டென்மார்க் தூதர்களிடம்இருந்து வெளிப்பட்ட எதிர்ப்பும் அவற்றை உலக அளவில் பிரபல்யப்படுத்தின. 2006 பெப்ரவரியில் முஸ்லிம் உலகெங்கும் டென்மார்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பதற்குக் காரணமாகின.அந்தநாட்டின் தூதரகங்கள் தாக்கப்பட்டன. பத்திரிகைகளின் சுய தணிக்கை, மத நிந்தனை தொடர்பான விவாதங்களை யும் உருவாக்கின.
டென்மார்க் அரசியலில் சூடு கிளப்பிய அந்த விவகாரம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அந்நாடு பெரும் வெளியுறவு நெருக்கடியைச் சந்திப்பதற்கும் வழிவகுத்தது. “யூலன்ட் போர்ஸ்டன்” நாளிதழில் வெளியாகிய அதே கேலிச் சித்திரங்களை பிரான்ஸின் பிரபல கேலிச் சித்திர வார இதழான “சார்ளி ஹெப்டோ” 2012இல் தனது பதிப்பில் மறுபிரசுரம் செய்திருந்தது.
முகமது நபி தொடர்பான சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களுடன் தொடர்புபட்ட வன்செயல்களின் உச்சமாக” சார்ளி ஹெப்டோ” வார இதழ் அலுவலகத்தின்மீது ஆயுதபணிகள் பெரும் தாக்குதல்நடத்தி அதன் ஆசிரியபீடப் பணியாளர்களைக் கூண்டோடு கொல்வதற்குஅவை போன்ற சித்திரங்களே காரணமாகின.
கர்ட் வெஸ்டர்கார்ட் 1980 களின் நடுப்பகுதியில் “யூலன்ட் போர்ஸ்டன்” பத்திரிகையின் கேலிச் சித்திர ஊடகவியலாளராகப் பணிபுரிந்தவர். பின்னாளில் நபி தொடர்பான சர்சைகளால் பிரபலமாகிய அவரது உயிருக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளால் பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. அதனால் தனது வாழ்நாளின் பிற்பகுதியை அவர் பொலீஸ் காவலுடன் முகவரி தெரியாத ரகசிய மறைவிடங்களில் கழிக்க நேர்ந்தது.
குமாரதாஸன். பாரிஸ்.