அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை போராளிகள் மீது இரகசியக் கண்காணிப்புச் செய்யும் நாடுகள்.
இஸ்ராயேல் நாட்டு NSO என்ற நிறுவனத்தின் பெகாஸுஸ் என்ற மென்பொருளைப் பாவித்துத் தமது நாட்டு எதிர்க்கட்சியாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைக் குழுக்களைக் கண்காணிப்பது பற்றி ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் ஒரு மென்பொருள் கசிவின் மூலமாக யார், எவரைக் கண்காணித்தார்கள் என்பது பற்றி விபரங்கள் வெளிவந்திருக்கின்றன. லா மொண்ட், த கார்டியன், வோஷிங்டன் போஸ்ட் உட்பட மேலும் இரண்டு டசின் ஊடகங்களும், மனித உரிமைக் குழுக்களும் சேர்ந்து கசிந்த விபரங்களை ஆராய்ந்தன. அவைகளுடைய ஆராய்வுக்கு அந்த நிறுவனத்தின் மென்பொருளால் கண்காணிக்கப்பட்ட 50,000 தொலைபேசி இலக்கங்கள் உட்படுத்தப்பட்டன. அவைகளை 2016 முதல் கண்காணிக்கப்பட்டிருக்கின்றன.
அந்த நிறுவனம் தனது மென்பொருளின் குறிக்கோல் தீவிரவாத நடவடிக்கைகள், குற்றங்களில் ஈடுபடுகிறவர்களைக் கண்காணிக்க மட்டுமே என்கிறது. ஆனால், குறிப்பிட்ட இலக்கங்கள் உலக நாடுகளின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைக் குழுக்களின் முக்கியத்துவர்கள், அராபிய அரசகுடும்பத்தினர், தூதுவர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியவர்களுடையவை. அந்த இலக்கங்களில் பாதிப்பேராவது பெகாஸுஸ் மென்மொருளைப் பாவித்து நிறுவனத்தின் சேவைகள் பெற்றுக்கொள்பவர்களால் பாதிக்கப்பட்டவையே.
சவூதி அரேபியாவின் இளவரசனால் கொல்லப்பட்ட ஜமால் கஷோஜ்ஜியின் உறவினர்கள், நண்பர்களின் இலக்கங்களும் அவைகளில் அடங்கும். கஷோஜ்ஜியின் மனைவியாகவிருந்தவரின் தொலைபேசி இலக்கம் அப்பட்டியலில் கொலைக்கு நான்கு நாட்களுக்குப் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கிறது.
கண்காணிப்பு மென்பொருளைப் பாவித்த நாடுகளில் சவூதி அரேபியா, பஹ்ரேன், மெக்ஸிகோ, எமிரேட்ஸ், இந்தியா, ஹங்கேரி, ஆஸார்பைஜான், கஸக்ஸ்தான், ருவாண்டா, மொரோக்கோ ஆகியவை முக்கியமானவை.
இந்தியாவைப் பொறுத்தவரை ராகுல் காந்தியால் பாவிக்கப்பட்ட இரண்டு தொலைபேசி இலக்கங்கள் உட்பட சுமார் 300 இலக்கங்கள் பெகாஸுஸ் மூலம் கண்காணிக்கப்பட்டிருக்கலாமென்று தெரிகிறது. அவரது இரண்டு உதவியாளர்களின் தொலைபேசிகளும் கண்காணிக்கப்பட்ட பட்டியலில் இருக்கிறது. இந்திய அரசு தாம் எவரையும் கண்காணிக்கவில்லை என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்