ஊடுருவலை அடுத்து மக்ரோனின்பாவனைக்குப் புதிய தொலைபேசி!

பிரான்ஸின் அதிபர் மக்ரோனின் பாவனையில் உள்ள கைத் தொலைபேசி களும் ‘பெகாசஸ்’ என்கின்ற மென் பொருள் மூலமான ஊடுருவல்களில்சிக்கியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.அதனையடுத்து அவரது சொந்த தொலைபேசிகள் மாற்றப்படவுள்ளன என்ற தகவலை எலிஸே மாளிகை வட்டாரங்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன.

ஊடுருவல் இலக்கில் உள்ளோர் பட்டியலில் அரசுத் தலைவரும் ஏனையஅரசுப்பிரமுகர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். இதனால் சைபர் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை புலனாய்வு சேவைகள் தொடக்கி உள்ளன.2017 முதல் மக்ரோன் பயன்படுத்திவரும் தொலைபேசியை மொரோக்கோ நாட்டின் ரகசிய புலனாய்வு சேவை ஒன்று அடையாளம் கண்டுள்ளது என்ற தகவலை பிரான்ஸின் ‘லூ மொண்ட்'(Le Monde) பத்திரிகை தெரிவித்துள்ளது.

https://vetrinadai.com/news/pegasus-spying-political-human/?fbclid=IwAR2vNXygJncTiZH4vTm4ifx9lAqoY8zz7NggPMTTqMYxZ88S8iZT5j11VPs

ஸ்மார்ட் போன் மற்றும் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் உள்ளவர் மக்ரோன்.பெகாசஸ் ஊடுருவல் மூலம் அவரது தொலைபேசியும் உளவு பார்க்கப்பட்டதா என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியாதநிலை உள்ளது என்று சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

பெகாசஸ் (Pegasus) என்கின்ற மென்பொருள் (software) மூலம் பல நாடுகளிலும் அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோரது ஸ்மார்ட் தொலை பேசிகளுக்குள் ஊடுருவல் நிகழ்ந்திருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து அது பற்றிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

இஸ்ரேலியக் கம்பனி ஒன்றினால் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றபெகாசஸ் மென்பொருள் (Pegasus software) உலகெங்கும் ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்த்தரப்பினர்களது தொலைபேசிகளுக்குள் ஊடுருவி ரகசியமாகத் தகவல்களைச் சேகரிப்பதற்குப்பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற தகவலை சர்வதேச ஊடகவியலாளர்சம்மேளனம் ஒன்று கடந்த வாரம் முதன்முதலில் வெளியிட்டிருந்தது.

முக்கிய பிரமுகர்களை உளவு பார்க்கும் இந்த சைபர் மென்பொருள் ஸ்மார்ட் போனில் செலுத்தப்பட்டால் ஒருவரது செய்திப் பரிமாற்றங்கள், படங்கள், ரகசிய(encrypted) செய்தித் தொடர்புகள்போன்றவற்றை அணுக முடியும். மைக்ரோ போன் மற்றும் கமரா என்பனவற்றையும் இயக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு ரகசிய வேவு மென்பொருள்பல நாடுகளிலும் பல்லாயிரக் கணக்கானவர்களது ஸ்மார்ட் போன்களில் ஊடுருவி செலுத்தப்பட்டுள்ளது என வெளியான தகவல் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சி அலைகளையும் உருவாக்கி உள்ளது.

பிரான்ஸிலும் முக்கிய அரசுப் பிரமுகர்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்களது தொலைபேசிகள் இந்த ஊடுருவல் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை அடுத்து நாட்டின் புலனாய்வு சேவைகள் அது விடயத்தில் உஷாரடைந்துள்ளன என்று செய்திகள் வெளியாகி உள்ளன.இது குறித்து பாரிஸ் அரச சட்டவாளர் அலுவலகம் விசாரணை ஒன்றையும் தொடக்கியுள்ளது. சந்தேக நபராகவோ அன்றி எதிரியாகவே எவரதும் பெயர் குறிப்பிடாமலேயே வழக்கு விசாரணை ஒன்றைத் தொடங்குவதற்கு பிரான்ஸின் சட்டங்கள் இடமளிக்கின்றன.

இஸ்ரேலியத் தனியார் நிறுவனமான என்எஸ்ஓ குறூப்(NSO Group) என்ற கம்பனியே ஸ்மார்ட் போன் தரவுகளை அபகரிக்கின்ற பெகாசஸ் மென்பொருளை வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் ரகசிய அமைப்புகளுக்கும் விநியோகித்துள்ளது என்று குற்றசஞ்சாட்டப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனம் அதனை மறுத்துள்ளது.

சமீபகாலமாக அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் பல விதமான சைபர் மற்றும் இணைய வழித் தாக்குதல் களுக்கு முகம் கொடுத்து வருகின்றன. அதனுடன் சேர்ந்து தற்போது ‘பெகாசஸ்’ என்ற பெயரிலான புதிய ஊடுருவல் விவகாரமும் தலையெடுத்திருக்கிறது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *