சைப்பிரசின் தொலைக்காட்சி நிலையமொன்று தடுப்பு மருந்து எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டது.
கடந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகமான அளவில் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகியிருந்ததால் சைப்பிரஸின் அரசு கடுமையான கட்டுப்பாடுகளைப் பொது இடங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவைகளால் கோபமுற்ற தடுப்பு மருந்து எதிர்ப்பாளர்கள் அரசின் நடவடிக்கைகளை ஆதரித்த தொலைக்காட்சி நிலையமொன்றைத் தாக்கியிருக்கிறார்கள்.
நாட்டின் தலைநகரான நிக்கோஸியாவிலிருக்கும் சிக்மா தொலைக்காட்சி நிலையமே சுமார் 2,500 பேரால் தாக்கப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகளை எதிர்த்து ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் ஞாயிறன்று பேரணி நடாத்திய 5,000 பேரில் பாதிப்பேர் அந்தத் தொலைக்காட்சி நிலையத்தை நோக்கி நகர்ந்தார்கள். தமது தடுப்பு மருந்து எதிர்ப்புகளைப் புரிந்துகொள்ளவில்லை என்ற கோபத்தில் அதை நோக்கி வாண்வேடிக்கைகளைச் செலுத்தி, வெளியேயிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி எரித்தார்கள்.
நிகோஸ் அனஸ்தாதியாடஸ் “கோழைகள் சிலரால் ஜனநாயகத்துக்கு எதிராக நடாத்தப்பட்ட வெறியாட்டம்,” என்று நடந்ததைச் சாடியிருக்கிறார்.
நாட்டின் கடைகள், சினிமாக்கள், பல்பொருள் அங்காடிகள்,உணவகங்கள், பொது சேவை இடங்களுக்குள் நுழையவேண்டுமானால் ஒரு தடுப்பூசியாவது போட்டிருக்கவேண்டும் அல்லது தனக்குத் தொற்று இல்லை என்று காட்டும் 72 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்பட்ட சான்றைக் காட்டவேண்டுமென்று கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டங்கள் கட்டடத்துக்குள்ளோ, வெளி அரங்காகவோ இருந்தாலும் 20 பேருக்கு அதிகமானவர்கள் சேருமிடங்களில் கடைப்பிடிக்கப்படவேண்டும். அத்துடன் முகக்கவசமும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்