அறிவியல் குழு நிபுணரது எச்சரிக்கை. குளிர்காலம் ஒரு புதிய வைரஸ் பரவும், செல்வந்த நாடுகள் அதில் தப்பக்கூடும்.
மாஸ்க், கை கழுவுதலைக் கைவிடாதீர்!
2023 இல் தான் முழு வழமை திரும்பும். பிரான்ஸில் அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்கிவருகின்ற அறிவியலாளர் குழுவுக்குத் தலைமை வகிக்கின்ற Jean-François Delfraissy இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
வரும் நாட்களில் தொற்று நோயின் நிலைவரம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது தொடர்பாக அவர் பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.அவர் தெரிவித்த முக்கிய தகவல்கள் வருமாறு :
வழமை நிலை தற்போது ஏற்பட்டுவிடாது. அது பெரும்பாலும் 2022 இறுதியில் அல்லது 2023 இலேயே முழு அளவில் திரும்பலாம். தீவிர பிறழ்வுகளுடன் புதிய வைரஸ் திரிபு ஒன்று குளிர்காலப் பகுதி யில் தோன்றும்.குளிர் காலத்தின் போக்கில் வரவிருக்கின்ற அந்த வைரஸ் திரிபு நீண்ட காலப் பகுதி ஒன்றுக்குள் பிரவேசிப்பதற்குக் காரணமாகும்.
90 வீதமான மக்களுக்குத் தடுப்பூசி ஏற்றிமுடித்துவிடக்கூடிய நம்மைப் போன்றசெல்வந்த நாடுகள் அந்தத் திரிபை எதிர் கொண்டு வெற்றி கொள்ளமுடியும்.ஆனால் குறைந்தளவானோருக்கு மட்டுமே தடுப்பூசி கிடைத்த வறிய நாடுகளுக்கு முன்னரணாக நாங்கள் நிற்கவேண்டிவரும்.தடுப்பூசி போடாத உலகின் பிற பகுதிகள் நம் முன்னே இருக்கும்.
தடுப்பூசி போடப்பட்ட நாடுகள் மற்றும் இல்லாத நாடுகள் என்ற இரண்டு வெவ் வேறு உலகங்களுடன் எவ்வாறு நாம் இணைந்து வாழ்வது?
எனக்குப் பல தொற்று நோய்களைப் பற்றித் தெரியும். நாங்கள் உடனடியாக வழமை நிலைக்குத் திரும்பிவிட முடியும்என்று நான் நினைக்கவில்லை. நான்பெரும்பாலும் மோசமான செய்திகளைக்கொண்டு வருபவன். 2023 ஆம் ஆண்டில் தான் நாங்கள் முழுமையான வழமைநிலையை எதிர்பார்க்க முடியும்.
தொற்று நோயை நிர்வகிக்கின்ற நீண்டகாலப் பகுதிக்குள் நாங்கள் இப்போதுவந்திருக்கிறோம். பல புதிய தடுப்புமருந்துகள் வரவிருக்கின்றன. சிகிச்சைகள் வெற்றியளிக்கும். நாங்கள் வெற்றி பெறுவோம். ஆனால் சில விடயங்களை நீண்ட கால நோக்கோடு கடந்து செல்லவேண்டிவரும்.
தற்சமயம் பிரெஞ்சு மக்கள் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு புறம் மிக வேகமாகத் தொற்றுகின்றடெல்ரா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. சுகாதாரப் பாஸ் மட்டும் அதனை எதிர்க்கப் போதாது. மாஸ்க், சமூக இடைவெளி போன்ற சிறிய பழக்கவழக்கங்கள் அதற்கு பெரும் அவசியம். நீங்கள் தடுப்பூசி ஏற்றியவராக இருந்தாலும் ஒரு சனக் கூட்டத்துக்குள் பிரவேசிக்கிறபோது மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.அது ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. பொதுஅறிவு சார்ந்த பிரச்சினை.அதே போன்று கைகளை முன்னர் போன்று கழுவிக்கொள்ளுங்கள்.
சுகாதாரப் பாஸ் இருந்து விட்டால் டிஸ்கோ சென்றுவிடலாம் என்று இளைய வர்கள் எண்ணுவது ஆபத்தானது. சமூகஇடைவெளி மிக மோசமாக மீறப்பட்டுவருகிறது.
சட்டம் என்ன சொல்கிறது எனப் பார்க்காமல் சனப் புழக்கம் உள்ளஇடங்களில் மாஸ்க் அணியுங்கள். நான் பாரிஸ் பிராந்தியத்தில் மாஸ்க்கை அணிகிறேன். கிராமங்களில் அதனை அகற்றுகிறேன். அது ஒரு முன்னுதாரணம்- இவ்வாறு அறிவியல் குழு நிபுணர் மேலும் விளக்கமளித்தார்.
குமாரதாஸன். பாரிஸ்.