வெற்றியின் உண்மையான அர்த்தத்தை தனது உயர்ந்த நடத்தையால் காட்டி உலகெங்கும் போற்றப்படும் இவான் பெர்னாண்டஸ் அனாயா.
ஸ்பெய்னில் நவர்ரா நகரில் மரதன் ஓட்டப் பந்தயம் நடந்துகொண்டிருந்தது. ஓடவேண்டிய புள்ளியை முடிக்கும் தருணத்தில் தனக்கு முன்னால் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்த கென்ய வீரர் அபெல் முதாய் எல்லையைக் கடக்கத் தயங்குவதைக் கவனித்தார் இரண்டாமிடத்தில் வந்துகொண்டிருந்த ஸ்பானிஷ்காரரான இவான் அனாயா. அதன் காரணம் தடகளத்திலிருந்த அறிவிப்புப்புக்களை அபெல் முதாய் புரிந்துகொள்ளாமல் ஓடவேண்டியதை ஓடி வென்றுவிட்டதாகக் கருதித் தான் ஓடுவதை நிறுத்திவிட்டாரென்பதைப் புரிந்துகொண்டார்.
உடனடியாக அபெலைத் தாண்டி ஓடி கடைசிப் புள்ளியை முதலில் தாண்டி முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள இவானுக்கு முழுச் சாத்தியமும் இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. ஸ்பானிஷ் மொழியறியாத அபெல் முதாய் அங்கே கொடுக்கப்பட்ட சைகைகளைத் தவறாகப் புரிந்துகொண்டதை அறிந்துகொண்ட இவான் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டார். அபெலுக்குத் தடத்தில் ஓடிமுடிக்கவேண்டிய புள்ளியைச் சுட்டிக் காட்டி அதுவரை ஓடிமுடிக்கும்படி காட்டினார். அபெல் முதாய் அதேபோல ஓடி முடித்து முதலிடத்தை வென்றார்.
அந்தப் போட்டியைக் காணவந்திருந்த சகலரும் இவானின் செய்கையைக் கண்டார்கள். விளையாட்டு என்றால் என்ன அதில் வெற்றி பெறுவது என்றால் என்னவென்பதை அவர்களுக்கு முன்னால் தனது மனித நடத்தையால் இவான் நடாத்திக் காட்டியதை அவர்களெல்லாரும் சாட்சிகளாகக் கண்டுகொண்டிருந்தார்கள்.
போட்டி முடிந்தபின் இவானைப் பேட்டிகண்ட பத்திரிகையாளர் அவரது நடத்தைக்கு என்ன காரணம், முதலிடத்தை வென்றிருக்கக்கூடிய சந்தர்ப்பதை ஏன் கைவிட்டார் என்று வினாவினார்.
“அவர்தான் உண்மையான வெற்றியாளர். அவர் தனது வேகத்தைக் குறைத்தபோது ஏற்பட்ட இடைவெளியில் நான் வென்றிருக்கலாம். ஆனால், அவர் அதைச் செய்யாதிருந்தால் நான் வென்றிருக்கச் சந்தர்ப்பமே இல்லை,” என்று இவான் பதிலளித்தார்.
தொடர்ந்தும் அதுபற்றி பத்திரிகையாளர் கேட்டபோது, “அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நான் வென்றிருந்தால், எனது வெற்றியின் கௌரவம் என்ன? பெற்றிப் பதக்கத்தில் கௌரவம் என்ன? எனது அம்மா அதைப்பற்றி என்ன நினைத்திருப்பார்?” என்பவை இவானின் பதில் கேள்விகளாக இருந்தன.
“ஒரு நாள் நாம் சமூகத்திலும் இதே போல முயற்சி செய்யும் மற்றவர்களை நாம் முன்னால் தள்ளிவிடவேண்டும் என்பதே என் கனவு,” என்கிறார் இவான் அனாயா.
சாள்ஸ் ஜெ. போமன்