பாரிஸில் கியூபா தூதரகம் மீது இரவுவேளை எரிகுண்டு வீச்சு!
பாரிஸ் நகரில் 15 ஆம் நிர்வாகப் பிரிவில்அமைந்திருக்கின்ற கியூபா நாட்டின் தூதரகப் பணிமனை மீது நேற்றிரவுபெற்றோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கியூபா தூதரகம் இத்தகவலை அதன் ருவிட்டர் தளத்தில் படங்களுடன் வெளியிட்டிருக்கிறது.
தீப்பற்றக் கூடிய திரவக் குண்டுகள் இரண்டு தூதரகக் கட்டடத்தின் மீதுவீசப்பட்டன என்றும் தீயணைப்புப் பிரிவினர் அங்கு வருவதற்கு முன்பாகவே தூதரக அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்திவிட்டனர். பலத்த சேதங்கள் ஏற்பட்ட போதிலும் ராஜதந்திரப் பணியாளர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் தொடர்பாக பாரிஸ் சட்டவாளர்அலுவலகம் விசாரணைகளைத் தொடக்கியுள்ளது. தாக்குதலுக்கான நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்று பொலீஸார் கூறியுள்ளனர். எவரும் கைதுசெய்யப்படவில்லை.
“கியூபாவுக்கு எதிராக வன்முறையையும்வெறுப்பையும் தூண்டி விடுபவர்களே இந்தச் சம்பவத்துக்கு நேரடியான பொறுப்புடையவர்கள்” – என்று கியூபாநாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாரிஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என்று வெளிவிவ கார அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. உலகெங்கும் கியூபா தூதரகங்களுக்குவெளியே கடந்த சில நாட்களாக கியூபா ஆதரவு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. நாட்டில் இடம்பெற்று வரும் அரச எதிர்ப்பு ஆர்பாட்டங்களை கியூபா ஆட்சியாளர்கள் வன்முறைமூலம் ஒடுக்கி வருவதாக அமெரிக்காகுற்றஞ்சாட்டி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புகளாலும் அமெரிக்காவின் தடைகளாலும் கியூபா பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. சமீப காலமாக அங்கு அமைதியின்மை நிலவி வருகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.