ஆப்கானிஸ்தானின் பக்கத்து நாடுகளுக்கு இராணுவ உதவியளிக்க ரஷ்யா தயாராகிறது.
தன் தலைமையிலான “பாதுகாப்புக் கூட்டுறவு” அமைப்பின் அங்கத்துவராக இருக்கும் நாடுகளில் ஒன்றான தாஜிக்கிஸ்தானுக்கு ஆபத்து ஏற்படுமானால் உடனடியாக அவர்களுக்கு ரஷ்யா இராணுவப் பாதுகாப்பு கொடுக்கும் என்று அந்த நாட்டுக்கு விஜயம் செய்த ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்திருக்கிறார்.
“நீண்டகாலமாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தும் அங்கே பாதுபாப்பையையும் அமைதியையும் நிலை நிறுத்த முடியாமல் தோல்வியடைந்து படு மோசமான நிலைமையில் ஒரு நாட்டைத் தலிபான்களின் கைகளில் அமெரிக்கா விட்டுவிட்டுச் செல்கிறது,” என்று புதன் கிழமையன்று தாஜிக்கிஸ்தானில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சோஜ்கு விமர்சித்திருக்கிறார். திட்டமிட்டு ஆப்கானிஸ்தானுக்குள் சிரியா, லிபியா ஆகிய நாடுகளிலிருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொண்டுவரப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அவர்கள் ஏற்கனவே இஸ்லாமிய காலிபாத் அமைப்பதற்காகப் போரில் ஈடுபட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
1979 – 1989 காலகட்டத்தில் அன்றைய சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுக்குள் தனது படையை அனுப்பி நாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர முற்பட்டுப் பெரும் தோல்வியடைந்தது. அந்த வேதனையான ஞாபகத்துடன் மீண்டும் ஆப்கானிஸ்தான் நிலைமையை எதிர்கொள்ள ரஷ்யா தயாராகிவருவதாகவே தெரிகிறது. ஆப்கானிஸ்தானுக்குள் நடத்திய போரில் சோவியத் யூனியன் இழந்த இராணுவத்தினரின் தொகை சுமார் 15,000 என்று குறிப்பிடப்படுகிறது.
கடந்த இரண்டு நூற்றாண்டாகவே ஆப்கானிஸ்தான் வெவ்வேறு வெளிநாட்டு இராணுவத்தினரின் தலையீட்டுக்கு உள்ளாகியிருக்கிறது. 1800 ம் நூற்றாண்டில் பிரிட்டரும், ரஷ்யாவும் ஆப்கானிஸ்தானைத் தமது கட்டுக்குள் கொண்டுவரப் போரிட்டுத் தோல்வியுற்றனர். தொடர்ந்தும் அரசியல் ஸ்திரமில்லாமலிருக்கும் ஆப்கானிஸ்தானுக்குள் ஓரளவு அமைதியை உண்டாக்க அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்