“அரசசேவை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்,” ஜோ பைடன்.
ஜனாதிபதிப் பதவியேறிய ஜோ பைடன் அமெரிக்காவைக் கொரோனாத் தொற்றுக்களிலிருந்து விடுவிக்க நாட்டு மக்களுக்கு படு வேகமாக இலவச கொவிட் 19 தடுப்பூசி வழங்க ஒழுங்குசெய்தார். அதை உற்சாகப்படுத்தும் பல பரிசுத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. ஆரம்பத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்தாலும் சமீப வாரங்களில் அவ்விடயத்தில் அமெரிக்காவில் தேக்கம் நிலவுகிறது. அதனால், வெள்ளை மாளிகையிலிருந்து புதிய கட்டுப்பாடுகள் பிறக்கவிருக்கின்றன என்று தெரிகிறது.
வியாழனன்று அதுபற்றிய விபரங்களில் சிலவற்றை வெளியிட்ட ஜோ பைடன், “தடுப்பு மருந்து போட்டுக்கொள்வது பற்றிய பல தவறான செய்திகள் பரவி வருகின்றன. நாம் அவற்றை எதிர்கொள்ளவேண்டிய நிலையிலிருக்கிறோம். புழக்கத்திலிருக்கும் தடுப்பு மருந்துகள் வெவ்வேறு திரிபுகளுக்கு எதிராகப் பலமாக வேலை செய்கின்றன,” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் அரசசேவை ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாகத் தடுப்பு மருந்துகள் போட்டுக்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதைச் செய்யாதவர்கள் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் தம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்கள் தமது சேவை காரணமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். பொதுமக்கள் புழங்கும் கட்டடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். தடுப்பூசி போடுவதற்காகச் சம்பளத்துடன் விடுமுறை பெற்றுக்கொள்ளலாம்.
வெள்ளை மாளிகையின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதுடன், நாட்டின் மாநிலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு நூறு டொலர்களை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என்று ஜோ பைடன் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவின் 60 விகிதமான வயதுக்கு வந்தவர்கள் தமது தடுப்பூசிகளை முழுவதுமாகப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் கடந்த வாரம் சுமார் 63, 600 பேருக்குப் புதியதாகக் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. டெல்டா திரிபு வேகமாக அமெரிக்காவில் பரவிவருவதாகத் தெரிகிறது. தொற்றுக்கு உட்பட்டவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெறாதவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா, நியூயோர்க் நகரங்களும் அமெரிக்காவின் முக்கிய தனியார் நிறுவனங்கள் பலவும் தமது ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும்போது கட்டயாமாகத் தடுப்பூசிகளைப் போட்டிருக்கவேண்டும் என்று அறிவித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்.