வெனிஸின் உப்பங்கழிக்குள் பெரிய கப்பல்கள் நுழைவது ஓகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும்.
சர்வதேசப் புகழ்பெற்ற இத்தாலியின் பழைய நகரமான வெனிஸின் சூழலுக்கு அதன் உப்பங்கழிக்குள் நுழைந்து, திரும்பும் பெரிய உல்லாசப் பயணக்கப்பல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகப் பல வருடங்களாகவே சுட்டிக் காட்டப்பட்டு வந்தது. ஒரு வழியாக அதைக் காதில் விழுத்திக்கொண்ட இத்தாலிய அரசு ஓகஸ்ட் 01 ம் திகதி முதல் பெரிய கப்பல்கள் அந்த உப்பு ஏரிக்குள் நுழைவது நிறுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.
பல்லாயிரக்கணக்காரை ஏற்றிக்கொண்டு வெனிஸுக்கு வரும் அந்த உல்லாசக் கப்பல்களால் உண்டாகும் அலைகள் நகரின் அத்திவாரத்தைத் தாக்கி பலவீனப்படுத்தவும், சூழலைக் கடுமையாகப் பாதிக்கவும் செய்கின்றன. கொரோனாக் கட்டுப்பாடுகளின் காரணமாக ஒரு வருடத்துக்கும் அதிகமாக நிறுத்தப்பட்டிருந்த அந்தப் போக்குவரத்து சமீபத்தில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது.
அதனால் சூழல் ஆர்வலர்கள் கொதித்தெழுந்து அரசைச் சாட ஆரம்பித்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் அமைச்சரவை கூடி எடுக்கப்பட்ட இந்த முடிவைப் பிரதமர் மாரியோ டிராகி அறிவித்திருக்கிறார்.
200 பேருக்கும் அதிகமானவர்களைக் கொண்டு வெனிஸுக்குள் நுழையும் கப்பல்கள் இனிமேல் மார்கேரா துறைமுகத்துக்கே அனுப்பப்படும். இந்த நடவடிக்கையால் தமது வியாபாரத்தில் இழப்பை அடையும் சுற்றுலாப் பயண நிறுவனங்களுக்கு அரசு சுமார் 157 மில்லியன் எவ்ரோக்கள் செலவிட்டு வேறு விதங்களில் உதவத் திட்டமிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்