தலிபான்களின் ஆதிக்க முன்னேற்றத்தால், பல்லாயிரக்கணக்கான ஆப்கானர்களைக் கடவுச்சீட்டெடுக்க விண்ணப்பிக்கிறார்கள்.
சமீப நாட்களில் ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு மாவட்டங்களாகத் தாக்கி நாட்டின் மீதான தமது பிடியைப் பலப்படுத்தி வருகிறார்கள் தலிபான் இயக்கத்தினர். அதன் விளைவாகக் கடவுச் சீட்டுகள் எடுக்க விண்ணப்பிக்கும் ஆப்கானர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கால் அதிகரித்திருக்கிறது.
கைப்பற்றப்படாத மாவட்டங்களும் தலிபான் படைகளால் முற்றுகையிடப்பட்டிருக்கின்றன. நாட்டின் அரசு காபுலை ஒட்டிய பகுதிகளில் ஓரங்கட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் படைகள் வெளியேறியதிலிருந்து தலிபான்களின் தாக்குதல்களுக்கு முட்டுக்கட்டை போடும் சக்திகள் ஏதுமில்லை. எனவே நாட்டின் எதிர்காலம் இருட்டாகவே தெரிவதாகப் பலரும் குறிப்பிட்டு நாட்டைவிட்டு ஓடவே திட்டமிடுகிறார்கள்.
தலிபான்களின் கைகளில் விழாத ஒரு சில பகுதிகளில் ஹெராத் குறிப்பிடத்தக்கது. வெள்ளியன்று அந்தப் பிராந்தியத்தின் தலைநகரான ஹெராத் சிட்டி தாக்கப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நகரில் ஐ.நா-அமைப்பின் ஆப்கானிஸ்தானுக்கான உதவித்திட்டக் காரியாலயம் அமைந்திருக்கிறது. தமது காரியாலயம் கடுமையாகத் தாக்கப்பட்டு வருவதாக ஐ.நா-வின் செயலகம் அறிவித்திருக்கிறது. அந்தக் காரியாலயம் தாக்கப்படுவதை அமெரிக்கா கடுமையான அறிக்கை ஒன்றின் மூலம் கண்டித்திருக்கிறது.
அதன் விளைவாகவே கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன. நாட்டிலிருக்கும் பல மேற்கு நாட்டுத் தூதரகங்களும் தமது ஊழியர்களை அங்கிருந்து அகற்றிவிட்டன அல்லது அகற்றிக்கொண்டிருக்கின்றன. மீதமிருக்கும் தூதரகங்களில் விசாக்களுக்கான விண்ணப்பங்களும் அதிகரித்திருக்கின்றன.
முடிந்தவர்கள் பலரும் ஈரானுக்கு விமானம் மூலமாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். பெருமளவு ஆப்கானிய அகதிகள் உள்ளே நுழையாமல் தடுக்க ஈரானுடனான நில எல்லைக் கடுமையாக ஈரானிய இராணுவத்தினரால் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்