டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் மைதானத்தில் வெளியாகிய பெலாருஸ் அரசின் முகம்.
ஏற்கனவே சர்வதேச அரங்கில் விடாப்பிடியாகத் தனது சர்வாதிகாரத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் பெலாரூஸ் அரசின் நடப்பொன்று டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் பந்தயங்களின் இடையேயும் வெளியாகியிருக்கிறது. பெலாரூஸ் தடகள வீராங்கனை கிரிஸ்டீனா திமனோவ்ஸ்கயாவைப் போட்டிகளிலிருந்து விலக்க பெலாரூஸ் அதிகாரம் முயற்சி செய்ததாலேயே அது வெளியாகியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது குழுவின் தலைமையை விமர்சித்த திமனோவ்ஸ்கயாவை உடனடியாகப் போட்டிகளிலிருந்து விலக்கி நாட்டுக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டது. டோக்கியோ விமான நிலையத்துக்கு கட்டாயமாகக் கொண்டுசெல்லப்பட்டார். விமானத்திலேற மறுத்த அவர் ஜப்பானியப் பொலீசாரிடம் அடைக்கலம் கேட்கவே விமான நிலைய ஹோட்டலில் அவரைப் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டார்.
சர்வதேச ஒலிம்பிக்ஸ் அமைப்பு, ஐ.நா-வின் அகதிகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையின் முயற்சியால் அவருக்கு அடைக்கலம் கொடுக்கவும், தொடர்ந்து தனது விளையாட்டுகளில் ஈடுபடவும் உதவ போலந்து முன்வந்திருக்கிறது. அவர் புதன் கிழமையன்று டோக்கியோவிலிருந்து போலந்துக்கு அனுப்பப்படுவார் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அதேசமயம் திமனோஸ்கயாவின் கணவர் பெலாரூஸிலிருந்து உக்ரேனுக்குத் தப்பியோடியிருப்பதாகவும் அங்கிருந்து அவர் போலந்து சென்று தனது மனைவியுடன் இணைந்துகொள்வாரென்றும் உக்ரேனிய உள்துறை அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது. திமனோஸ்கயாவுக்கு அடைக்கலம் கொடுக்க போலந்து மட்டுமின்றி செக் குடியரசும் தயாராக இருந்தது என்று ஐ.நா-வின் அகதிகள் அமைப்பு தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்