ரக்பி உலகக்கிண்ணம் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது
உலகளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான ரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் 2022 ம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவருடம் ஒக்ரோபர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற ஏற்கனவே ஏற்பாடாகி இருந்தது.இருப்பினும் தற்போதய உலகச்சம்பியன்கள் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இந்த போட்டிகளில் பங்கு பற்றுவதில் இருந்து பின்வாங்கிய நிலையில் இதை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இங்கிலாந்தின் நியூகாஸ்ரில் நகரத்தில் அக்ரோபர் மாதம் 23ம் திகதி ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கிண்ண போட்டிகளை ஆரம்பிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
இருந்தாலும் இந்தக்காலகட்டத்தில் உலகக்கிண்ண போட்டிகளை நடாத்துவது பொருத்தமற்றதும் பொறுப்பற்ற செயலுமாகும் என ஏற்பாட்டுக்குழுவின் முதன்மைப்பணிப்பாளர் ஜொன் டூட்டன் தெரிவித்துள்ளார்.இந்த மாற்றம் வருகின்ற 2022ம் ஆண்டு கட்டாரில் நடைபெற இருக்கும் உலகக்கிண்ண போட்டிகளை பாதிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்தும் கூடிய கவனம் செலுத்தப்பட்டு திகதி நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குபற்ற பின்வாங்கிய நாடுகள் ,தங்கள் வீரர்களின் நலனும் பாதுகாப்பும் குறித்து நடப்பு கோவிட் 19 காலத்தின் அச்சம் தெரிவித்தே தங்கள் முடிவை அறிவித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.