வீடிழந்து அமெரிக்கர்கள் வீதிக்குப் போகாமலிருக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கெதிரான முடிவெடுத்த ஜோ பைடன்.
அமெரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு முக்கிய பிரச்சினையைத் தீர்க்காமல் விடுமுறையில் போய்விட்டார்கள். கடந்த செப்டம்பரில் வாடகை கட்டாதவர்களை வீட்டைவிட்டுத் துரத்தக்கூடாதென்று போடப்பட்ட சட்டத்தை நீடிக்காததுதான் அது. விளைவாக, பல மில்லியன் அமெரிக்கர்கள் ஆகஸ்ட் மாதத்தில் வாடகை நிலுவை காரணமாக வீதிக்கு வரக்கூடும் என்ற நிலைமை உண்டாகியிருந்தது.
அமெரிக்க அதிகாரிகளின் கணிப்பின்படி 3.6 மில்லியன் அமெரிக்கர்கள் தாம் வாழும் வீடுகளுக்கு வாடகையைக் கொடுக்காததால் வரும் இரண்டு மாதங்களுக்கு வெளியே அனுப்பப்படலாம். வீடிழப்பவர்கள் தொகை அதிகமானால் ஒரு சாரார் மேலும் நெருக்கமாக வாழ ஆரம்பித்து அதன் விளைவாகக் கொரோனாத் தொற்று அதிகரிக்கலாம் என்று அமெரிக்காவின் தொற்று நோய் பரப்பைத் தடுக்கும் அதிகாரமே கடந்த வருடம் வாடகை கட்டாதவர்களை வீடிழக்கச் செய்யாத நிலைமைக்குப் பின்னாலிருந்தது.
தற்போது பாராளுமன்றம் அதை நீடிக்கத் தவறியதால் ஜோ பைடன் மீண்டும் தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரத்திடம் தொடர்பு கொண்டு வாடகை கட்டாதவர்களை வெளியே அனுப்பாமலிருக்க உத்தரவிடும்படி பணித்திருக்கிறார்.
தான் செய்தது அமெரிக்காவின் அரசியல் சாசனத்துக்கு எதிரானதே என்று அறிந்தும் அதைச் செய்திருப்பதாக ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். அவரது உத்தரவைச் செல்லாதது என்று குறிப்பிட்டு அது நீதிமன்றத்துக்குப் போகுமானால் அது ரத்து செய்யப்படும் என்று தெரிந்தே அதை அவர் செய்திருக்கிறார்.
எவரும் அந்த உத்தரவை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லாத பட்சத்தில் ஒக்டோபர் மாதம்வரை வாடகை கட்டாதவர்கள் வீடிழக்கும் நிலை உண்டாகாது.
சாள்ஸ் ஜெ. போமன்