தம் வாழ்நாளில் பெரும்பகுதியை பிரிட்டனில் கழித்த சுமார் 30 ஜமேக்கர்கள் திருப்பியனுப்பப்படவிருக்கிறார்கள்.
இவ்வாரத்தில் சுமார் 30 ஜமேக்கர்கள் ஐக்கிய ராச்சியத்திலிருந்து தமக்குப் பரிச்சயமில்லாத தாம் பிறந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட இருக்கிறார்கள். காரணம், அவர்கள் குற்றங்கள் செய்து தண்டிக்கப்பட்டவர்கள் என்பதாகும். தமது ஐந்து வயதிலே ஐக்கிய ராச்சியத்துக்கு வந்தவர்களும் அவர்களில் அடங்குவர். திருப்பியனுப்பப்படவிருப்பவர்கள் தற்போது அரசின் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மனித உரிமை அமைப்புக்களின் கடுமையான விமர்சனத்தைப் பெற்றுவருகிறது ஐக்கிய ராச்சியத்தின் அந்தத் திட்டம். ஜமேக்கா ஒரு முன்னாள் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் பகுதியாகும். தமது வாழ்வின் பெரும்பகுதியைப் பிரிட்டனில் கழித்திருக்கும் அவர்கள் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றிராவிட்டாலும் பிரிட்டர்களே என்கிறார்கள் மனித உரிமை அமைப்புக்கள். அவர்களில் தமது குற்றங்களுக்காகச் சிறைவாசம் அனுபவித்து முடித்தவர்களும் உண்டு. பிரிட்டனில் வாழும் அவர்களில் பலர் அங்கே சொந்தக் குடும்பம், பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
ஐக்கிய ராச்சியத்தின் அரசு கடந்த வருடம் ஜமேக்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்படி 12 வயதுக்கு முன்னர் வந்தவர்கள் எவரையும் திரும்பியனுப்புவதில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது ஐக்கிய ராச்சியம் திருப்பியனுப்புகிறவர்களின் வயது அதைவிடக் குறைவாக இருந்ததால் அரசு தான் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தையும் மீறுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. அத்துடன் கரீபியத் தீவுகளிலிருந்து வந்து குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தமது நாடுகளுக்குத் திருப்பியனுப்பப்படுவது மற்றைய நாடுகளிலிருந்து வந்து குற்றஞ்செய்தவர்களைத் திருப்பியனுப்பப்படுவதை விட அதிகமாக இருப்பதும் அரசின் வெளிவிவகார அமைச்சின் புள்ளிவிபரங்களிலிருந்து காணக்கூடியதாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்