கிரீஸில் காட்டுத்தீக்கள் கட்டுக்குள் வரும் சமயம் அல்ஜீரியாவில் பல இடங்களில் காடுகள் எரிகின்றன.
அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீரின் கிழக்குப் பகுதியிலிருக்கும் நகரங்களிலும், மலைக்காடுகளிலும் உண்டாகியிருக்கும் காட்டுத்தீக்கள் இதுவரை 65 உயிர்களைக் குடித்திருப்பதாக நாட்டின் ஜனாதிபதி தெரிவிக்கிறார். காட்டுத்தீக்களை அணைப்பதில் தீயணைப்புப் படையினருடன் சேர்ந்து போராடிவரும் இராணுவத்தினர் 28 பேர் இறந்திருக்கிறார்கள்.
திங்களன்று மாலை முதல் பல காட்டுத்தீக்கள் ஆரம்பித்து எரிந்துகொண்டிருக்கின்றன. அவைகளில் பல மனிதர்களால் உண்டாக்கப்பட்டவை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அப்பகுதிகளில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்க, காற்றும் வேகமாக வீசிக்கொண்டிருப்பதால் நிலைமை மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 70 இடங்களில் காடுகள் எரிந்துகொண்டிருக்கின்றன.
வட ஆபிரிக்காவின் ஆதி குடிகள் என்று குறிப்பிடப்படும் பர்பார்கள் வசிக்கும் பகுதிகளிலேயே காட்டுத்தீக்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. அல்ஜீர் நகரிலிருந்து சுமார் 100 கி.மீற்றர் கிழக்கேயிருக்கும் இப்பாகங்களில் வாழும் அந்த மக்கள் இயற்கையுடன் சேர்ந்து வாழ்பவர்கள். அவை போக்குவரத்து வசதிகள் அதிகமற்ற, நீர் வசதிகளும் குறைந்த பகுதிகளாக இருக்கின்றன. அதனால், எரியும் தீயை அணைக்கத் தேவையான நீர்க்குழாய்கள் இல்லை. வாழும் குடிமக்கள் தமக்குக் கிடைப்பதை வைத்து தீயை அணைக்க முயல்கிறார்கள். சிலர் தப்பியோட, மேலும் சிலர் நெருப்பணைக்க முயன்று எரிந்து மடிவதும், காயமடைவதுமாக இருக்கிறார்கள் என்கிறது செய்திகள்.
கபீல்லே பிராந்தியத்தின் தலை நகரையடுத்துள்ள மலைகளில் எரியும் தீக்கள் திட்டமிட்டுச் செய்யப்பட்டிருக்கும் குற்றச் செயல்கள் என்று நாட்டின் தொலைக்காட்சியில் குறிப்பிட்டிருக்கிறார் பிரதம மந்திரி. நூற்றுக்கணக்கான குடிமக்களைக் காப்பாற்றிய இராணுவத்தினர் பலர் இறந்துபோனதுக்கு அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்