தீவிரவாத இயக்கமொன்றுடன் தொடர்புடையவர்கள் என்று பல பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் சவூதியில் சிறைத்தண்டனை.
2018 இல் சவூதி அரேபியாவில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் பலர் “பெயர் வெளியிடப்படாத” தீவிரவாதக் குழுவொன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களில் 69 பேருக்கு சவூதிய நீதிமன்றம் 22 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனைகளை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் பலர் எவ்விதக் காரணங்களும் குறிப்பிடாமல் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சவூதி அரேபியாவுக்கான ஹமாஸ் இயக்கத்தின் பிரதிநிதியான 82 வயதான முஹம்மது அல்-குதைரிக்கு 15 வருடங்களும், அவரது மகன் ஹானிக்கு மூன்று வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களிருவரும் 2019 இல் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுடன் கைது செய்யப்பட்ட மற்றும் பல பாலஸ்தீனர்கள் மீதான வழக்கு விசாரிக்கப்படவிருக்கிறது.
பாலஸ்தீன ஜிகாத், ஹமாஸ் இயக்கங்கள் சவூதி அரேபியா “பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக இயங்கியவர்களைக் கடுமையாக, அநீதியாகத் தண்டித்திருப்பதாகக்” கண்டனம் தெரிவித்திருக்கிறன. முஹம்மது அல்-குதைரி சவூதி அரேபியாவில் இரண்டு தசாப்தத்துக்கும் அதிகமாக ஹமாஸின் பிரதிநிதியாக சவூதிய அரசுடன் தொடர்புகொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியா விதித்திருக்கும் தண்டனைகள் 40 நாட்களுக்குப் பின்னர் மேன்முறையீடு செய்யலாம். மனித உரிமைக் குழுக்கள் சவூதி அரேபியா கொடுத்திருக்கும் தண்டனைகளைக் கண்டித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்