இங்கிலாந்தில் 34 வது பெரும் போட்டி(Big Match)- சென்ஜோண்ஸ் பழையமாணவர் வெற்றி
34 வது தடவையாக இங்கிலாந்தில் நடைபெற்ற பெரும்போட்டியில் (Big Match 2021) யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரியின் பழையமாணவர்கள் அணி வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்தின் Watford இல் அமைந்துள்ள Metropolitan Police மைதானத்தில் இன்று 14ம் திகதி சனிக்கிழமையாகிய இன்று நடைபெற்ற போட்டியிலேயே இந்த வெற்றி பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வரலாற்றில் வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப்படும் சென்ஜோண்ஸ் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலை அணிகளுக்கிடையில் வருடா வருடம் தாயகத்தில் இடம்பெற்றுவருவது வழமையாகும். அதன் தொடர்ச்சியாகவே இங்கிலாந்தில் அந்த அந்த கல்லூரிகளின் பழைய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்படும் இந்தப் பெரும் போட்டி இந்த வருடம் 34 வது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
முக்கியமாக திறந்த போட்டியாக நடைபெறும் போட்டி மிக எதிர்பார்க்கப்படும் போட்டியாகும்.வெற்றிக்கிண்ணத்துக்காக மோதிய இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன.40 பந்து பரிமாற்றங்களை கொண்ட போட்டியா நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி துடுப்பெடுத்தாடியது.ஆட்ட நிறைவில் 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 106 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்ஜோண்ஸ் கல்லூரி பழையமாணவர்கள் அணி நிறைவில் 106 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 3 விக்கெட்டுக்களால் வெற்றிவாகை சூடியது. போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் அணியின் மதுஷன் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் சகலதுறை ஆட்டக்காரராக சென்ஜோண்ஸ் கல்லூரியின் ஹரியும் தெரிவு செய்யப்படிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான துடுப்பெடுத்தாட்ட போட்டியில் சென்ஜோண்ஸ் கல்லூரி பழைய மாணவர்களும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான துடுப்பெடுத்தாட்ட போட்டியில் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களும் வெற்றிபெற்றிருந்தனர் என்பது மேலதிக தகவலாகும்.