காஸாவில் செயற்படும் பாலஸ்தீன இயக்கங்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டன!
மே மாதத்தில் இஸ்ராயேல் மீது காஸாவின் பாலஸ்தீன இயக்கங்கள் தாக்கியபோது அவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவான Human Rights Watch தனது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது. அந்த மாதத்தின் பதினோரு நாட்கள் இஸ்ராயேலுக்கும் காஸாவின் பாலஸ்தீன அமைப்புக்களுக்கும் நடந்த போரிலேயே இக்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இஸ்ராயேலின் விமானத்தாக்குதல்கள் காஸா பிராந்தியத்தின் ஒரு பகுதியைத் தரை மட்டமாக்கியது. அதே சமயத்தில் காஸாவிலிருந்து சுமார் 4,000 ஏவுகணைக் குண்டுகள் இஸ்ராயேல் மீது செலுத்தப்பட்டன. அவையினால் 12 இஸ்ராயேல் குடிமக்கள் கொல்லப்பட்டதுடன், சில டசின் இஸ்ராயேலியர்கள் காயமடைந்தனர். ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டிருக்கிறார்.
காஸாவிலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணைக் குண்டுகள் குறிதவறிப் பல பாலஸ்தீனர்களை காஸாவில் கொன்றதுடன், மேலும் பலரைக் காயப்படுத்தியது. அவைகளால் ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இஸ்ராயேலின் தாக்குதல்களால் காஸாவில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களில் காஸாவின் ஆயுதக் குழுக்களின் போராளிகள் ஒரு பகுதியாகும்.
ஐ.நா-வின் அகதிகள் பேணும் அமைப்பான UNRWA தனது அறிக்கையொன்றில் காஸாவின் ஆயுதக் குழுக்கள் அங்கிருக்கும் பாடசாலைகளுக்குக் கீழாகச் சுரங்கங்களை அமைத்து அவை மூலமாக இஸ்ராயேல் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்துவது பாடசாலை ஆசிரியர், ஊழியர்கள், மாணவர்களுக்குப் பெரும் ஆபத்தை உண்டக்குகிறது என்று சாடியிருக்கிறது.
பாலஸ்தீனர்களைத் தாக்கும் இஸ்ராயேலும் போர்க்குற்றங்களைச் செய்துவருவதாகப் பல தடவைகள் Human Rights Watch உட்பட்ட மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றன. அவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இஸ்ராயேல் மீது மட்டுமல்ல பாலஸ்தீனர்கள் மீதும் போர்க்குற்றங்கள் செய்தமைக்காக விசாரணை நடாத்தித் தண்டிக்கவேண்டுமென்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்