“நான்கு கார்கள், ஒரு ஹெலிகொப்டர் நிறையப் பணத்துடன் நாட்டை விட்டோடினார் அஷ்ரப் கானி.”
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கானி காபுலைக் கைப்பற்றத் தலிபான்கள் நகருக்குள்ளே நுழைய ஆரம்பித்தவுடனேயே அங்கிருந்து தாஜிக்கிஸ்தானுக்கு ஓடிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டது. தான் காபுலைக் கைவிடக் காரணம் “இரத்தக்களறி ஏற்படாமலிருக்கவே” என்று அஷ்ரப் கானி குறிப்பிட்டாலும் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை.
அஷ்ரப் கானி தாஜிக்கிஸ்தானுக்குச் சென்றாரா அல்லது வேறெங்காவது சென்றாரா என்ற கேள்வி பின்னர் எழுப்பப்பட்டிருக்கிறது. அவர் இருக்குமிடம் எதுவென்பது கேள்விக்குறியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பிறந்த அஷ்ரப் கானி அமெரிக்க – ஆப்கான் குடிமகனாகும். ஆப்கானிஸ்தானில் 2002 இல் வர்த்தக அமைச்சராக முன்பு அவர் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக இருந்தவர், உலக வங்கியில் கடமையாற்றியவர். 2014 இல் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாகினார்.
ஆப்கானிஸ்தானிலிருக்கும் ரஷ்ய தூதுவராலயத்தின் அதிகாரிகள் ஞாயிறன்று கானி நாலு கார்கள், ஒரு ஹெலிகொப்டர் நிறையப் பணத்துடன் காபுலை விட்டோடியதாகக் குறிப்பிடுகிறார்கள். ஹெலிகொப்டரில் மேலும் பணத்தை நிரப்ப முயன்று அதற்கு இடமில்லாமல் போகவே பண நோட்டுக்கள் விமானங்கள் பறக்கும் இடத்தில் கொட்டியதைத் தான் கண்டதாகவும் ரஷ்யத் தூதுவராலய அதிகாரி நிகிதா இஷ்ஷெங்கோ ரோய்ட்டர் நிறுவனத்துக்கு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ரஷ்ய ஜனாதிபதி புத்தினின் பிரத்தியேக ஆப்கானிஸ்தான் தூதர் ஸமீர் கபுலோவ் “ஆப்கானிஸ்தானின் அரசாங்கத்தினர் தப்பியோடும்போது கொஞ்ச நஞ்சப் பணமாவது கஜானாவில் விட்டுச் சென்றிருப்பார்கள் என்று நம்புகிறோம்……” என்று ஏற்கனவே வானொலிக்குப் பேட்டி கொடுத்திருந்தார்.
காபுலிலிருக்கும் ரஷ்யத் தூதுவராலயம் மூடப்படாது என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது. அங்கேயிருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டாலும் ராஜதந்திரத் தொடர்புகளுக்காகத் தொடர்ந்தும் செயற்படும். திங்களன்றும், செவ்வாயன்று தலிபான் இயக்கத் தலைவர்களுடன் ரஷ்யா வெவ்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகளை நடாத்தவிருக்கிறது. அவர்களின் அரசை அங்கீகரிப்பதா இல்லையா என்பது அதன் பின்னரே அறிவிக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்