காபுல் ஜனாதிபதி மாளிகையின் எஜமானர்கள் யாரென்பது மின்னல் வேகத்தில் மாறியது.
அமெரிக்காவின் கணிப்போ காபுல் மூன்று மாதங்களுக்காவது ஆப்கானின் ஆட்சியாளர்களிடம் இருக்கும் என்றிருந்தது. அக்கணிப்பு வெளியாகி ஒரு வாரத்துக்குள்ளேயே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் அவரது பரிவாரங்களும் தமது உயிரைக் காத்துக்கொள்ள நகரை விட்டுத் தாஜிக்கிஸ்தானுக்கு ஓடிவிட்டார்கள். நகரைக் காப்பாற்றுவதாக வாக்குறியளித்திருந்த இராணுவமோ, நகர்காவலர்களோ நகருக்குள் நுழைந்த தலிபான் இயக்கத்தினரைத் தாக்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள், அல்லது சரணடைந்தார்கள்.
அல் ஜஸீரா ஊடகத்துக்காப் பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட படங்களில் ஒரு நாளுக்கு முன்னர் ஜனாதிபதி அஷ்ரப் கானி தோன்றியிருந்த காரியாலக் கதிரை மேசையைச் சுற்றி நின்று நாட்டின் புதிய எஜமானர்களான தலிபான் இயக்கத்தினர் படமெடுத்துக் கொண்டார்கள். பின்னணியில் ஆப்கானிஸ்தானை ஸ்தாபித்த அஹ்மத் ஷா டுரானியின் படம் தொங்கிக்கொண்டிருந்தது. நாட்டை மீண்டும் கைப்பற்றுவது என்ற திட்டத்தின் பின்னர் தலிபான் இயக்கத்தினர் ஊடகத்துடன் தொடர்புகொள்வது, அதற்காகத் தெளிவான திட்டங்களைப் போடுவது போன்றவைகளில் திட்டமிட்டுச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்று பலரும் சுட்டிக்காட்டிவந்த விடயம் அவர்கள் காபுலை முற்றுக்கையிட்டபின் நடந்துகொண்ட ஒவ்வொரு விடயங்களிலும் காணக்கூடியதாக இருந்தது.
காபுல் நகரின் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த வெளிநாட்டுத் தூதுவராலயங்களுக்கு அவர்களின் அதிரடிக் கைப்பற்றல் அதிர்ச்சியாகியது. ஏற்கனவே தமது தூதுவராலயங்களைப் பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியவர்கள் தவிர மற்றைய நாடுகளின் தூதுவராலயங்களும் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்தன. அவர்களுடைய அடுத்த பாதுகாப்பு மையம் நாட்டின் விமான நிலையப் பாதுகாப்பு வலையமாகும். அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காகப் பிரத்தியேகமாக அமெரிக்க, பிரிட்டிஷ் படையினர் அங்கே வந்திறங்கியிருக்கிறார்கள்.
விமான நிலையத்தைத் தனது பாதுகாப்பில் வைத்திருந்த அமெரிக்கா அங்கேயிருந்து தாம் வெளியேறும்வரை அந்த வலயத்தை எவரும் தாக்கலாகாது, அப்படித் தாக்கும் பட்சத்தில் தமது பதிலடி மிகவும் மோசமானதாக இருக்கும் என்று எச்சரித்திருந்தது.
ஞாயிறன்று மாலை தலிபான் தலைவர்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியைத் தாம் கையிலெடுத்ததாகத் தெரிவித்ததும் காபுல்வாழ் மக்களிடையே ஏற்பட்ட திகிலில் பலர் அங்கிருந்து அகப்பட்டும் வழியில் தப்பியோட முயல்கிறார்கள். ஒரு பகுதியினர் விமான நிலையத்தை அடைந்து முற்றுக்கையிட்டார்கள். விமானங்கள் ஓடும் பாதைகளில் இடித்து முண்டிக்கொண்டு ஓடும் பலரை பிபிசி செய்தியாளர்களின் படங்களில் காணக்கூடியதாக இருந்தது. அவர்கள் விமானங்களில் இடம்பிடிக்க முயன்று வருகிறார்கள்.
பெரும்பாலான வெளிநாட்டவர்கள், தூதுவராலய ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன், விமான நிலையம் கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் விமானங்களுக்காக மூடப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. விமான நிலையம் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அப்பகுதிக்குப் பொது மக்கள் எவரும் வரக்கூடாது என்று அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்