சவூதி அரேபியாவில் பல வருடங்களாக வேலை செய்துவந்த யேமனியர்களின் ஒப்பந்தங்கள் ரத்துசெய்யப்பட்டன.
யேமனிய மருத்துவர்கள், மருத்துவ சேவையிலிருப்பவர்கள், தாதிகள், ஆசிரியர்கள் மட்டுமன்றி கூலித்தொழிலாளர்கள் பலருக்குச் சமீபத்தில் அவர்களுடைய வேலைக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சவூதியின் தெற்குப் பாகங்களிலிருக்கும் நகரங்களில் பல நூற்றுக்கணக்கான யேமனியர்கள் மருத்துவர்களாகப் பல வருடங்கள் வேலை செய்து வருகிறார்கள்.
சவூதி அரேபியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான யேமனியர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் அவர்களுடைய நிறுவனங்களிலிருந்து அவர்களுடைய சேவைக்கான தேவை இனி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளுக்கு சவூதி அரசால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையொன்றில், “யேமனியர்களுடன் புதிய சேவை ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ளவேண்டாம், ஏற்கனவே சேவையிலிருப்பவர்களுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்யுங்கள்,” என்று இருந்ததாக ரோய்ட்டர் ஊடகம் குறிப்பிடுகிறது.
தனது தெற்கு எல்லையிலிருக்கும் யேமனில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூத்தி இயக்கத்தினருடன் சவூதி அரேபியா போரில் ஈடுபட்டு வருகிறது. யேமனில் சவூதி அரேபியாவின் ஆதரவுடன் ஒரு அரசாங்கம் ஒரு பக்கத்தில் செயற்பட்டு வர ஹூத்தி இயக்கத்தினர் அந்த அரசை எதிர்த்துத் தாக்கி யேமனில் பல பகுதிகளைத் தமது பிடியில் வைத்திருக்கிறார்கள்.
அதைத் தவிர சவூதி அரேபியாவின் குடிமக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. நாட்டின் தென் பகுதியில் அது 11.7% ஆக இருப்பதாகச் சவூதி அரேபியப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தனது குடிமக்களைப் பெருமளவில் வேலைக்கமர்த்துவது என்பது சவூதி அரேபிய அரசின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
யேமனியர்களை பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டினுள் வைத்திருக்க விரும்பாத சவூதி அரேபியா அவர்களை வெளியேற்றுவதன் மூலம் தனது குடிமக்களுக்கான வேலை வாய்ப்புக்களையும் உண்டாக்க விரும்புகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்